தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Wednesday 29 July 2015

பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...

பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...
அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர்.

இறைவனின் இறைத்தூதர்களான மூசா (அலை), ஈசா (அலை) ஆகியோரும் பெண்களினதும் ஆண்களினதும் தப்பான ஆபாச உடைகளுக்கும், தீய பாலியல் தொடர்புகளுக்கும் வழிகாட்டவில்லை. ஓரினச் சேர்க்கைகளுக்கும், ஒருபால் திருமணங்களுக்கும் அனுமதியளிக்கவில்லை. ஈசா(அலை) அவர்களின் தாய் மரியம்(அலை) அவர்களும் அன்று வாழ்ந்த பெண்களில் மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புடைய கற்புடைய பெண்ணாகவே வாழ்ந்தார்கள். இன்று மேற்கு உலகம் அறிமுகப்படுத்தும் ஆபாசமான, ஆண்களின் காட்சிப் பொருளாக பெண்கள் இருக்க வழிகாட்டவில்லை. முன்னைய இறைதூதர்கள் கொண்டுவந்த இறை நெறிநூல்கள் செயல் அற்றுப் போனபோது, மக்களை அந்த நேர்வழியில் தொடர்ந்து வழி நடத்துவதற்கு அல்லாஹ், இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் கொண்டு வழிகாட்டினான்.
உலகில் அன்று வாழ்ந்த இறைத் தூதர்களும், இறை நெறிநூல்களும் ஆண் பெண் நல்வாழ்வுக்கு நல்ல வாழ்க்கை வழிமுறைகளையே போதித்தனர். பெண்களை ஆண்களின் அடிமையாக வாழ வழிகாட்டவில்லை. அத்துடன் பெண்கள் ஆண்களின் கைப்பாவைகளாக வாழும்படி குறிப்பிடவில்லை. ஆனால் மதம் என்ற போர்வையில் சில தீய அரசர்களின் தாளத்திற்கு ஆடும் போலி மத போதகர்களே ஷைத்தானின் தூண்டுதலினால் இறை தூதர்களின் அல்லது போலிக் கடவுள்களின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை உள் நுழைத்தனர். இதனால் பெண் குழந்தைகள் பக்தியின் பெயரால் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.
சீதேவிகளான(?) பெண் குழந்தைகள் சமுதாயத்தில் மூதேவிகளாக(?) மாற்றப்பட்டனர். கணவன் இறக்கும்போது பெண்களும் தீயில் கட்டையேற பணிக்கப்பட்டனர். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டனர். பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது. பெண்களை எல்லா சகோதரர்களும் மனைவியாக வைத்திருக்கும் வழக்கமும் காணப்பட்டது. பக்தியின் பேரால் பெண்கள் சிலைகளை நிர்வாணமாக வலம் வரும் சடங்குகள் அறிமுகமாகி இருந்தது. விபச்சாரம் பெண்களைச் சீர்கெடுத்தது. அரை நிர்வாணமாக பெண்கள் ஆண்களின் முன் நடனமாட ஊக்குவிக்கப்பட்டனர். இன்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அரைகுறையாக ஆடையணிந்து நடனமாடும் காட்சிகள் காட்டப்படுவதைக் காணலாம். இறைவனின் விபச்சாரத் தண்டனைகள் ஏழைகளுக்கு மட்டும் வழக்கிலிருந்தது. செல்வந்தர்கள் தப்பு செய்தால் கண்டு கொள்ளப்படவில்லை. அழகு ராணிப் போட்டி என்ற பெயரால் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.
விதவைகள் மறு மணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர். விதவைகள் நல்ல வைபவங்களில் பங்கு கொள்வது கெட்டசகுனமாக கருதப்பட்டது. சில சமூகங்களில் குமரிப் பெண்கள் வீட்டில் சில காலம் மறைத்து வைக்கப்படும் வழக்கமும் காணப்பட்டது. சில சமூகப் பெண்கள் அரைகுறை ஆடையணியவே கட்டாயப்படுத்தப்பட்டனர். இலங்கையில் காணப்படும் சீகிரியா பெண்கள் ஓவியங்கள் பணிப் பெண்கள் எப்படி உடையணிய பணிக்கப்பட்டனர் என்பதற்குச் சான்றுகளாகும். உரிய பாதுகாப்பின்றி பெண்கள் வெளியே செல்லப் பணிக்கப்பட்ட போது பெண்கள் தமது கற்பை இழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தன. பெண்கள் திருமணத்தின் போது சீதனக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர். கணவன் செய்யும் கொடுமைகளை சாகும் வரை சகித்து வாழவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. அவர்கள் விவாகரத்து செய்வது பாவமாகக் கணிக்கப்பட்டது. இக்கொடுமைகளுக்கு 1434 ஆண்டுகளுக்கு முன் ஏக இறைவனின் இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் சாவுமணி அடித்தன. இஸ்லாம் மார்க்கம் பெண்களை எப்படிக் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை அவதானியுங்கள்.
ஆண்களையும் பெண்களையும் சமனாக கருதிப் போதனை செய்யும் மார்க்கம் இஸ்லாம்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் :- 33 : 35 )
ஆகவே அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சமமாக கருதியே பொதுவான போதனைகளைச் செய்கின்றான். இஸ்லாத்தில் ஆண் பெண் வேறுபாடு பொதுவான செயற்பாடுகளில் இல்லை. அத்துடன் அல்லாஹ் இப்படியும் இருபாலாருக்கும் எச்சரிப்பதையும் காணலாம்.
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.  (அல்குர்ஆன் :- 33 : 36)
இவ்வசனத்தில் அல்லாஹ்வின் மார்க்கக் கட்டளைகள் அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் மூலமாக வருவதால் அதில் மாற்றம் செய்ய எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை என விளக்குகின்றான்.
பெண் குழந்தைகள் மூலம் சொர்க்கம் செல்லும் பெற்றோர்.
அன்றும் இன்றைய நவீன உலகிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை விரும்புவது போல் அதிகமாக பெண் பிள்ளைகளை விரும்பவில்லை. வேண்டா வெறுப்புட னேயே பெண் குழந்தை பிறந்த செய்தியை ஏற்கின்றனர். ஆனால் இஸ்லாம் பெண்களின் மூலம் பெற்றோர் அடையும் நன்மைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ மெய்தும்வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமை நாளில் வருவார்; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி நபி(ஸல்) தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள்.  (நூல் :முஸ்லிம்)
அன்னை ஆயிஷா(ரழி) கூறினார்கள்:-
என்னிடம் தன் இரு பெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஓர் ஏழைப் பெண்மணி வந்தாள். அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதனை அப்பெண் தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு, தான் உண்பதற்காக ஒரு பழத்தை தமது வாயின் பக்கம் உயர்த்தினாள். அதற்குள்ளாக அவ்விரு பெண் பிள்ளைகளும் அப்பழத்தையும் உண்ணக் கேட்டனர். உடனே அப்பெண், தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அப்பெண்ணின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அப் பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாக்கிவிட்டான்;; நரகை விட்டு அப்பெண்ணை விடுவித்து விட்டான் எனக் கூறினார்கள். (நூல் :- முஸ்லிம் )
அன்று அரேபியாவில் சில பிரிவினர் பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்தனர். அதனை இஸ்லாம் முற்றாகத் தடுத்தது. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;; அவர்களுக்கும் உங்க ளுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்;:-17 :31)
இன்றும் பல நாடுகளில் பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை நாம் அறிகின்றோம். ஆனால் 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனை அருளியதன் மூலம் இஸ்லாமிய உலகம் இப்பெண் குழந்தைகளின் கொலையை முற்றாக தடுத்து விட்டது. இவ்வாறு பெண்களுக்கு கண்ணியம் வழங்கிய மார்க்கம் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கமாகும். இன்று பெண் உரிமை வேண்டும் என ஆபாசத்திற்கும், பெண்களை மானபங்கப்படுத்துவதற்கும் சில ஷைத்தானிய கொள்கைவாதிகள் சில சிலை வணங்கிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருவதைக் காண்கின்றோம். ஆனால் அவ்வகையான நாடுகளில் எல்லாம் பெண் சிசுக் கொலைகளும், பாலியல் ரீதியான பெண்கள் துன்புறுத்தல்களும் கோடிக்கணக்கில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து நீங்கி பெண்கள் கண்ணியம் அடைவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுவதே ஒரே வழியாகும். இஸ்லாம் பெண்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
பெண்களுக்கு நலவை நாடுங்கள்! நிச்சயமாக பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேற்பகுதி, மற்றவைகளைவிட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர்! அதனை அப்படியே விட்டு விடுவீரானால் அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலைமையைக் கடைப்பிடியுங்கள்.) (நூல்:புகாரி,முஸ்லிம்.)
அன்று நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் பெண்களின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதற்காக முன் வைத்த சத்தியக் கருத்துகளை, கட்டளைகளை அவதானியுங்கள்.
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:-
ஒரு முஃமினான ஆண்(கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் அவளிடமுள்ள வேறொரு (நற்)குணத்தைக் கொண்டு பொருந்திக் கொள்வானாக! (நூல்;: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவ ழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உனக்கு நற்கூலி கொடுக்கப்படாமல் இல்லை; எந்த அளவிற்கென்றால், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக் கவளம் வரை. (நூல் :- புகாரி , முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உலகம் (சிறிது காலம்) சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும். அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களிலே மிகச்சிறந்தது, நல்ல ஸாலிஹான மனைவியாவாள்.
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள்(ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்;; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்:-24: 32)
MTM. முஜீபுதீன், இலங்கை
நன்றி கற்பிட்டியின் குரல் /அல்லாஹ் அவர்களுக்கு கிருபைச் செய்வானாக !![ஆமீன் ]

No comments:

Post a Comment

Best comment is welcomed !