தொழுகையைப் பேணுவோம் !

தொழுகையைப் பேணுவோம் !
அழ்ழாஹூத்தஆலாவை ஏக இறைவனாக ஏற்று முஸ்லிம்கள் என்னும் அந்தஸ்த்துடன்
வாழ்கின்ற எமக்கு அந்த இறைவன் விதித்த கடமைகளுள் முதன்மையானதாக தொழுகை
என்னும் இறைவணக்கம் காணப்படுகிறது. வல்ல நாயன் அழ்ழாஹ் தனது அருள்
மறையில் கூறுகின்றபோது,


தொழுகையை நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம்
குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக தொழுகை
மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது.
(30:31,04:103,107:45)

இன்னும் இது போன்ற அதிகமான இறைவசனங்களின் மூலம் தொழுகையின் அவசியத்தையும்
அதன் பயனையும் தெளிவாக விளக்கிக் கூறுகிறான்.

ஆனால் இன்று நம்மத்தியில் காணப்படுகின்ற அதிகமான சகோதரர்கள் குறிப்பாக
வாலிபர்கள், இளைஞர்கள் இந்த இஸ்லாமிய இறை கட்டளையான தொழுகையின்
விடயத்தில் மிகவும் பொடுபோக்குத்தனத்துடன் அக்கறையின்றிக் காணப்படுவதை
நாம் அவதானிக்கிறோம். உண்மையில் ஒரு முஸ்லிமுக்கும் ஏனைய முஸ்லிம்
அல்லாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை, வேறுபாட்டை வெளிக்கொணர்வதே
இந்தத் தொழுகைதான். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு
ஆகியவற்றுக்குமிடையே பாலமாக இருப்பது தொழுகையைக் கைவிடுவது தான்.'(ஸஹீஹ்
முஸ்லிம்:134)
இந்நபிமொழியில் இருந்து தொழுகையை விடுவது இறை மறுப்பாளர்களாக நம்மை
மாற்றிவிடும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

அதுமாத்திரமல்லாது ஒரு சமூகத்திற்கு அழ்ழாஹ்வின் உதவியை கொண்டுவருவதற்கு
மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருப்பதும் இந்த இறைகட்டளையான
தொழுகையேயாகும். இன்று நமது வியாபார சமூகத்தில் மிகவும் தாழ்ந்த
நிலைக்குச் சென்றுள்ள பொருளாதார மந்த நிலைக்கும் நம்மத்தியில்
காணப்படுகின்ற தொழுகையின் மீதான அக்கறையின்மை கூட ஒரு பிரதான காரணியாக
இருக்கமுடியும். அழ்ழாஹ் தனது திருமறையில் கூறுகின்றபோது,

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி
தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி
மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(02:45)

ஆக, மேலுள்ள இறைவனின் கட்டளைக்கிணங்க, நமது சமூகத்தின் மீதான பொருளாதார
மந்த நிலை மாத்திரமல்லாது இந்நாட்டில் இன்று வேரூன்றியுள்ள முஸ்லிம்
சமூகத்திற்கெதிரான இனவாத அழுத்தங்களில் கூட இன்றுவரை இறைவனின் உதவி நம்மை
வந்து சேரவில்லை என்றால் நமது வணக்க வழிபாடுகள் விடயத்தில் நாம்
அழ்ழாஹ்வை உரிய முறையில் திருப்திப்படுத்தவில்லை என்ற காரணத்தைக் கூட
முன்வைக்க முடியும்.

எமது சகல விதமான தேவைகளின் விடயத்திலும் வல்ல இறைவனிடம் உதவியை
எதிர்பார்க்கின்ற நாம் அந்த இறைவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற விடயத்தில்
பொடுபோக்காக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். எனவே அழ்ழாஹ்
கூறிய விதத்தில் அவனுக்குரிய வணக்க வழிபாடுகளில் மிகவும் பிரதானமாகவுள்ள
தொழுகையின் விடயத்தில் கரிசனையுடன் கவனம் செலுத்தி எமது ஈருலக வாழ்வின்
வெற்றிக்கும் இறையருளை ஆதரவு வைக்கின்ற நன்மக்களாக நாம் அனைவரும்
வாழ்ந்து மரணிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
Thanks:srilankanmuslim.wordpress.com

Comments