இரத்தக் கசிவும் நோன்பும் :
வினா -5:
ரமளானில் மாதவிடாய் உண்டானதன் விளைவாக விடுபட்ட நோன்பு நாட்களுக்குப் பகரமாக ஈடு (களா) செய்யாத ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?
விடை:
விசுவாசிகளான பெண்கள் மத்தியில் இத்தகையவை நிகழ்வது தூரதிஷ்டமானது; வருந்தத் தக்கது. இது சிலவேளை அறியாமை காரணமாகவோ அல்லது சோம்பல் காரணமாகவோ நிகழலாம்; இரண்டு காரணங்களும் பிழையானவையே. இவற்றை அகற்றவென, அதாவது அறியாமையைப் போக்கிக்கொள்ள அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும், சோம்பலைப் போக்கிக்கொள்ள அல்லாஹ்வையும் அவனது தண்டனையையும் கொண்டு அச்சம் கொள்வதும் அவசியமாகும். எனவே, இவ்வாறு நடந்து கொண்ட ஒரு பெண் பச்சாதாபப்பட்டு,மனம் வருந்தி அல்லாஹ்வின் பாப மன்னிப்பை வேண்டி நிற்க வேண்டும். அத்துடன் அவளுக்கு விடுபட்ட நாட்கள் எத்தனை என்பதை முழு முயற்சி செய்து அறிந்து அவற்றிற்கு ஈடு (களா) செய்ய வேண்டும். அத்தகைய பெண்களின் பாப மன்னிப்பு வேண்டுதலை அங்கீகரிக்கும் படி நானும் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்; பிரார்த்திக்கின்றேன்.
வினா -6:
ஒரு பெண் அறுபத்தைந்து வயதை அடைந்து விடுகின்றாள். கடந்த பத்தொன்பது வருடங்களாக அவளுக்குப் பிள்ளைகளே கிடைக்கவில்லை. தற்போது, மூன்று வருடங்களாக அவளுக்குத் தொடரான இரத்தக் கசிவு இருக்கின்றது. அவள் நோன்பு நோற்க என்ன செய்ய வேண்டும்? அத்துடன் அவளைப் போன்ற நிலையிலுள்ள பெண்கள் (தொழுகை, நோன்பு என்பன தொடர்பாக) என்ன செய்ய வேண்டும்?
விடை :
இத்தன்மை உடைய ஒரு பெண் அவளுடைய வழமையான மாதவிடாய்க் காலத்தின் போது தொழுகை. நோன்பு என்பவற்றிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். உதாரணமாக அவள் தனது வழமையான மாதவிடாயை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் உண்டாகப் பெறுகின்றாள் எனவே, அவள் ஒவ்வொரு மாதமும் முதல் ஆறு நாட்களில் தொழுவதையும் நோன்பு நோற்பதையும் தவிர்க்க வேண்டும் அவ்வாறு செய்ததன் பின்னர், அவள் குளித்து சுத்தமாகி தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் அவள் எவ்வாறு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவள் தனது மறைவான பகுதியை மிக நன்றாகக் கழுவி, ஒரு துணித் துண்டை (Pad) அவ்விடத்தில் வைத்ததன் பின் வுழூஉ செய்ய வேண்டும். கட்டாயமான (பர்ளான) தொழுகைக்குரிய வேளையில் அவள் இவ்வாறு செய்ய வேண்டும். இக் கட்டாயத் தொழுகை வேளைகளைத் தவிர்ந்த சுன்னத்தான தொழுகைகளின்போதும் அவள் இவ்வாறு செய்ய முடியும். அத்தகைய பெண்கள் இத்தகைய கட்டங்களில் எதிர் நோக்கும் கஷ்டங்களைப் பொறுத்து, அவர்கள் லுஹரையும் அஷரையும் சேர்த்து (லுஹருடைய வேளையில் அல்லது அஷருடைய வேளையில்) தொழவும், மஃரிபையும் இஷாவையும் (மஃரிபுடைய வேளையில் அல்லது இஷாவுடைய வேளையில்) தொழவும் அனுமதிக்க முடியும். (ஆனால் தொழுகைகளை சுருக்கித் தொழ முடியாது.) இந்த விதமாக ஒரு நாளின் ஐவேளைத் தொழுகைக்குப் பகரமாக (அதிகாலை ஃபஜர் தொழுகையையும் சேர்த்து) மூவேளைத் தொழுவதற்கு ஏற்பாடு செய்துகொள்ள முடியும். இத்தகைய கட்டாய (பர்ளு)த் தொழுகைக்குச் செய்யும் வுழூஉவைக் கொண்டு அவள் தனது சுன்னத்தான தொழுகைகளையும் தொழுது கொள்ள முடியும்.
வினா - 7:
நிஃபாஸுடைய ஒரு பெண் ரமளானில் தனது ஏழு நாட்கள் நோன்பை நோற்காது விட்டு விடுகின்றாள். அவள் அதை ஈடு (களா) செய்யவில்லை. அதற்கு அவள் கூறிய காரணம், அவள் சுகவீனமுற்று இருந்தாள் என்பதே. அடுத்து வந்த ரமளான் மாதத்தில் அவள் இன்னும் ஏழு நாட்கள் நோன்பு நோற்கவில்லை. அதற்கான காரணம், அவள் தனது குழந்தைக்குப் பால் ஊட்டுகின்றாள் என்பதே. இந்நிலையில் அவள் என்ன செய்ய வேண்டும்?
விடை :
உண்மையிலேயே அவள் சுகவீனமுற்று முதலில் விடுபட்ட ஏழு நாட்களுக்கும் ஈடு (களா) செய்ய முடியாது போயிருந்தால், அடுத்த ரமளான் வந்து போனால்கூட அவள் மண்ணிக்கப் படுவாள். ஆனால். உண்மையிலேயே அவள் சுகவீனமுறாத நிலையில் சோம்பல் காரணமாக நோன்பை விட்டிருந்தால் அவள் பெறும் பாபமொன்றை செய்தவளாவாள். அதற்காக அவள் அல்லாஹ்விடம் பாபமன்னிப்பு கோருதல் வேண்டும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு (குறிப்பிட்ட ரமளான் மாதமொன்றின்) விடுபட்ட நோன்புகளுக்காக அடுத்த ஷஃபான் மாதம் வரை ஈடு (களா) செய்ய முடியவில்லை. ஷஃபான் என்பது அடுத்த ரமளான் மாதத்திற்கு முந்திய மாதமாகும்.
இது பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே இவ்வாறு கூறுகின்றார்கள்: "சிலவேளைகளில் நான் ரமளானின் சில நாட்களை (நோன்பு நோற்காது) விட்டு விடுகின்றேன். ஆனால், அவற்றிற்கு ஈடு (களா) செய்வதை ஷஃபான் மாதத்திலன்றி செய்ய முடிவது இல்லை
எனவே, ஒரு பெண் இவ்வாறு நடந்து கொள்வதையிட்டு மன்னிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பின், அவள் தனது விடுபட்ட நோன்புகளுக்காக ஒரு வருடம் (அல்லது இரண்டு வருடங்கள்)
பிந்தியாவது ஈடு (களா) செய்ய முடியும்.
வினா 8:
ஒரு கர்ப்பிணி ஒரு விபத்தையடுத்து தனது வயிற்றிலிருந்த சுமையை இழந்ததுடன் அதிக இரத்த வெளியேற்றத்திற்கும் ஆளானாள். இது அவள் கருத்தரித்த ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்தது. எனவே, அவள் நோன்பு நோற்காதிருப்பதற்கு அனுமதி உண்டா? அல்லது நோன்பு நோற்க வேண்டுமா? அத்துடன் அவள் தனது நோன்பை முறித்துக்கொண்டால், அதன் மூலம் ஒரு பாபத்தைச் செய்வதாக கொள்ள முடியுமா?
விடை:
இமாம் அஹ்மத் அவர்கள் கூறியது போல், நான் கூறுவதாவது: கர்ப்பிணிக்கு மாதவிடாய் இல்லை. கர்ப்பந்தரித்த பெண்ணாக ஒரு பெண் ஆகிவிடும்போது அவளது வழமையான மாதவிடாய் வட்டம் நின்று விடுகின்றது. "அல்லாஹ் பெண்களுக்கு மாதவிடாய் என்றொன்றை ஏற்படுத்தியிருப்பதன் காரணம், அதன் மூலம் ஜீவப் பொருளின் (Embryo) ஆரம்ப நிலைக்கு ஊட்டச்சத்து வழங்கத்தான்" என சில அறிஞர்கள் கூறுகின்றனர். எப்பொழுதாவது ஒரு பெண் கர்ப்பிணியானால் அவளது மாதவிடாய் நின்று விடுகின்றது. எவ்வாறாயினும், சில பெண்களுக்கு கர்ப்பந்தரித்த பின்னரும் மாதவிடாய் தொடர்ந்திருக்கச் செய்யும். இது உண்மையான மாதவிடாய் என்றே கொள்ளப்படும். ஏனெனில், ஆரம்ப மாதவிடாய் அவர்கள் கருத்தரித்தமையால் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில், மாதவிடாய் தொடர்பான அத்தனை சட்டங்களும் இதற்குப் பொருந்துவனவாக இருக்கும்.
இன்னும் சில வகையிலான இரத்த வெளியேற்றங்கள் இருக்கின்றன. இவை -ஏதாவது தூக்குதல், விழுதல் அல்லது அத்தகைய விபத்துக்கள் மூலம் உண்டாகுபவையே. இவை மாதவிடாய் மூலம் ஆகுபவை அல்ல. மாறாக, ஏதோவோர் இரத்த நாலத்திலிருந்து வெளிப்படுவதாகும். எனவே, இவை எந்த வகையிலும் ஒருகர்ப்பிணியின் தொழுகையையோ நோன்பையோ கட்டுப்படுத்தாது; தடை செய்யாது. அவளது நிலை நன்கு சுத்தமான ஒரு பெண்ணின் நிலையேயாகும்.
ஆமினும், ஒரு விபத்து மூலம் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கரு வெளியாகிவிடும்போது, அது தெளிவான மனித உருவைக் கொண்டிருந்தால், அப்பொழுது வெளியாகும் இரத்தம் நிஃபாஸுடையதே என இஸ்லாமிய அறிஞர்கள் கருதியுள்ளனர் எனவே, தொழுகை, நோன்பு போன்றவற்றைத் தவிர்ப்பதுடன், அவள் நன்கு சுத்தமாகும் வரை தனது கணவனுடன் உடலுறவு கொள்வதும் கூடாது. ஆனால், அக்கட்டத்தில் அவளில் இருந்து வெளியாகும் கரு மனித உருவின் அமைப்பைக் கொண்டிராவிட்டால், அப்பொழுது அவளது இரத்த வெளியேற்றம் நிஃபாஸுக்குரியது அல்ல. அது வீணாகிய இரத்தமே. அதனால் தொழுகை, நோன்பு போன்றவைக்கு தடையேற்படுவது இல்லை. ஒரு தாயின் கருப்பையில் உள்ள கரு மனித உருவைப் பெறுவதற்கு மிகக் குறைந்த பட்சம் 81 நாட்கள் எடுப்பதாக இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து வழங்கியுள்ளார்கள். இது கீழ்க்காணும் ஹதீஸுடன் இணங்கி வருகின்றது.
நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது:
"உங்களுள் ஒவ்வொருவரும் உங்கள் தாயின் கருப்பையில் நாற்பது நாட்கள் சேர்த்து வைக்கப் படுவீர்கள். பின்னர் அதற்கு சமமான (நாற்பது நாட்கள்) காலத்தில் ஓர் இரத்தக் கட்டியாக மாற்றப் படுவீர்கள். பின்னர் அதற்குச் சமமான (நாற்பது நாட்கள்) காலத்தில் ஒரு சதைத் துண்டாக மாற்றப் படுவீர்கள். பின்னர் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி நான்கு விடயங்களை எழுதும்படி கட்டளையிடுவான். அவையாவன: அவனது உணவுப் பங்கீடு, அவனது வயது, அவன் (மறுமையில்) தூர்ப்பாக்கியமானவனின் நிலையில் இருப்பானா? அல்லது நற்பாக்கியம் பெற்றவனின் நிலையில் இருப்பானா?. 65 என்பனவாகும்.
தாயின் கருப்பையில் உள்ள கரு 81 நாட்களுக்கு முன் மனித உருவின் அமைப்பைப் பெறுவது சாத்தியமில்லை. சில இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்கமைய அனேகமாக இக்கால எல்லை 90 நாட்களாகும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !