நல்ல துணையை தேர்ந்தெடுப்போம்! ஒத்து வாழ்வோம்! வெற்றி காண்போம்!
உங்களது வாழ்க்கைத்துணை அழகாக இருப்பதை விட, உங்கள் ஜோடி வசதியானவராக இருப்பதை விட, உங்கள் இல்லத்தரசி படித்த பட்டதாரியாக இருப்பதை விட பண்பட்ட, பொறுமையுள்ள ஒத்த கருத்துள்ளவளாக, ஒத்த சிந்தனையுள்ளவளாக இருப்பதுதான் வாழ்க்கையின் நிம்மதிக்கும் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமையும்.
இந்த கருத்தை நமது நபி அவர்கள், "பெண்கள் அழகுக்காக, செல்வத்திற்காக, வமிசத்திற்காக, மார்க்கத்திற்காக மணம் முடிக்கப்படுவார்கள். நீ மார்க்கமுள்ளவளை தேர்ந்தெடு, உன் கரங்கள் மண்ணாகட்டும் என்று மிக அழகாக கூறியதிலிருந்து மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம். 18
உங்களுக்கு தய்யிப் - பொருத்தமாக, மனம் விருப்பமாக உள்ளத்திற்கு மகிழ்ச்சியாக, வாழ்க்கைக்கு நறுமணமாக இருப்பவளை மணம் முடித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை நாம் ஆழமாக சிந்தித்தால் இந்த கருத்து நன்றாக புரியவரும்.
தாப. தய்யிப் என்பது இந்த இடத்தில் மிக மிக இலக்கிய நயத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாப, தய்யிப் என்பதற்கு
18. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 5090.
19. அல்குர்ஆன் 4:3. மிகப் பொருத்தமான பெண் யார் என்றால் அவள் கணவனை மகிழ்விப்பாள். கணவனை பாதுகாப்பாள், கணவனுக்கு பணிவிடை செய்வாள், கணவனின் வளர்ச்சியை விரும்புவாள். கணவனின் வெற்றிக்கு துணை நிற்பாள். கணவனின் இலட்சியம் நிறைவேற, அவனது குறிக்கோள் முழுமை அடைய அன்னை ஹாஜர் தமது கணவனார் நபி இப்ராஹீமுக்கு ஒத்துழைப்பு நல்கியதுபோன்று முழு ஒத்துழைப்பு நல்குவாள். பாலைவனத்தில் விட்டாலும் குழந்தையை பலி கொடுக்க கேட்டாலும் எதற்கும் சம்மதம்தான். அல்லாஹ்வின் நபியாகிய, அறிவாளியான, நல்ல கணவனுக்கு கீழ்ப்படிவதிலும், அவரது நோக்கம் நிறைவேற தனது சுக வாழ்க்கையை இழந்துவிட்டு நாடோடியாக மக்காவின் பாலைவனத்தில் குடியேறவும், பிறகு குழந்தையை பலி கொடுக்கவும் அந்த பெண்மணி தயாராகி இருந்தார் என்றால் அது எத்தகைய நற்பாக்கியம். அவர்தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் அழகிய முன்மாதிரி ஆவார்.
அப்படிப்பட்ட வாழ்க்கைத்துணையை ஆணும் தேட வேண்டும். பெண்ணும் தேட வேண்டும். இன்று இதற்கு மாற்றமாக, அற்ப அழகை, சொற்ப செல்வத்தை, உலக அந்தஸ்தை, உலகாதாய படிப்பை மட்டுமே அடிப்படையாக வைத்து துணைகள் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிக்கோள் இல்லாத வாழ்க்கையாக, இலட்சியமற்ற பயணமாக வாழ்க்கை மாறி இருக்கிறது.
வாழ்க்கை என்றால் என்ன என்றே நமக்கு புரியவில்லை. ஏன் வாழ்கிறோம், நமது பொறுப்பு என்ன, நமக்கு கொடுக்கப்பட்ட கடமை என்ன? இவை எதுவும் நமது சிந்தனையில் இருப்பதில்லை.
வாழ்க்கைத்துணை என்பவர். கல்வியில் வணக்க வழிபாட்டில் உயர்வான சாதனைகளை செய்வதில் உறுதுணையாக, உதவியாக, உத்வேகத்தை கொடுப்பவராக இருக்க வேண்டும்.
உண்பது. உறங்குவது. தின்பது. உடுத்துவது. ஊர் சுற்றுவது. ஆட்டம் பாட்டம் போடுவது, கண்ணை கவரும் ஆடைகளை அணிந்து விழாக்களிலும் விருந்துகளிலும் வலம் வருவது, அற்ப உலகத்தை சேர்த்து வைத்துக்கொண்டு பெருமை அடிப்பது அல்ல வாழ்க்கை. இதற்காக கொடுக்கப்பட்டதல்ல வாழ்க்கை.
உங்கள் உடலுக்கு பொருந்தாத ஆடையை உங்களால் அணிய முடியுமா? உங்கள் குடலுக்கு ஒவ்வாத உணவை உங்களால் உண்ண முடியுமா? உங்கள் காலை கடிக்கும் காலணியைக் கொண்டு நீங்கள் நீண்ட நேரம் நடக்க முடியுமா?
உங்கள் நல்ல கருத்தை செயல்படுத்தாத உங்கள் காரியதரிசியைக் கொண்டு நீங்கள் உங்கள் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடியுமா? உங்கள் நல்ல திட்டங்களை புரிந்து செயல்படுத்தாத மந்திரியைக் கொண்டு நீங்கள் மக்களுக்கு நல்லாட்சியை தர முடியுமா? அப்படித்தான் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கை துணை உங்களை புரியாமல் இருந்தால், உங்களோடு ஒத்த கருத்துள்ளவராக இல்லை என்றால், உங்களால் வாழ்க்கையை வெற்றிகரமாக நகர்த்த முடியாது.
ஒரு வாகனம் தரையில் சீராக ஓட வேண்டுமென்றால் அதன் சக்கரங்கள் எல்லாம் ஒரே அளவாக ஒரே தடிப்பமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வாகனம் சீராக ஓட முடியாது.
அப்படித்தான் வாழ்க்கையும். வாழ்க்கையில் நமது துணை நம்மை புரிந்தவராக, நமது நோக்கத்தை அறிந்தவராக, நமது இலட்சியத்தை விளங்கியவராக, நமது குறிக்கோளை ஆதரிப்பவராக, ஒத்த சிந்தனையும் ஒத்த புரிதலும் உடையவராக இருக்க வேண்டும்.
கணவன், தனது நல்ல எண்ணத்திற்கு ஏற்ப மனைவியை மாற்ற வேண்டும். தனது உயர்வான இலட்சியத்தை தனது வாழ்க்கைத்துணைக்கு புரிய வைக்க வேண்டும். வாழ்க்கையில் தனது இலக்கு என்ன. குறிக்கோள் என்ன என்பதை மனைவியிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கேற்ப தனது மனைவியை மாற்ற வேண்டும். தான் கற்ற நல்லதை அவளுக்கு கற்பிக்க வேண்டும். தான் புரிந்த வாழ்க்கை பாடங்களை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.
வாழ்க்கையில் நாம் என்ன சாதிக்க வேண்டியது இருக்கிறது. பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது, வரவுக்கு ஏற்ப எப்படி செலவு செய்வது. குடும்ப உறுப்பினர்ககளை எப்படி பேணுவது, பிள்ளைகளை எப்படி வளர்ப்பது, இப்படியாக நல்ல திட்டங்களை இல்லத்தாளுக்கு அன்பாக பண்பாக பாசமாக சொல்லித் தர வேண்டும்; புரியவைக்க வேண்டும்.
அப்போதுதான் ஒத்த கருத்து ஏற்படும். ஒத்த சிந்தனை உருவாகும். கணவன் மனைவி இருவருக்கு இருவேறு கருத்துகள் இருக்கலாம். முரண்பட்ட சிந்தனைகள் இருக்கலாம். ஒத்துபோகாத குறிக்கோள்கள் இருக்கலாம். மாறுபட்ட இலட்சியங்கள் இருக்கலாம். ஆனால், இருவரும் உட்கார்ந்து கலந்தாலோசித்து ஒருவர் மற்றவருக்கு நல்லதை புரிய வைக்கும்போது, உயர்வானதை விளங்க வைக்கும்போது, தனது சிறப்பான வாழ்க்கை இலட்சியத்தை உணர வைக்கும்போது மற்றவரும் தனது கருத்தை. சிந்தனையை. குறிக்கோளை இலட்சியத்தை மாற்றிக் கொள்வார்.
பிறகு. இருவரும் ஒரே குறிக்கோளில், ஒரே இலட்சியத்தில் வாழ்க்கையை முன்னே எடுத்து செல்லலாம்.
நாம் வாழ்கிற உலக வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடாது. நல்ல வாழ்க்கை, நல்ல துணைவி, நல்ல வாழ்வாதாரம், நல்ல நண்பர்கள் அமைய வேண்டும் என்று நமக்கு ஆசைதான். சில நேரம் விரும்பாதது நடந்து விடுகிறது. ஒரு கவிதையில் சொல்லப்படுவதுபோல காற்று, கப்பலை அது விரும்பாத திசைக்கு கொண்டு செல்கிறது. அப்படித்தான் வாழ்க்கையும் சில சமயம் ஆசைப்படாதது கிடைத்து விடலாம். பிடிக்காதது அமைந்து விடலாம்.
பழங்கள் பொதுவாக இனிப்புடையவையாகும். ஆனால், பழங்களில் சில புளிக்கவும் செய்யும். சில பழம் கசக்கவும் செய்யும். சில ருசியே இல்லாமல் இருக்கும்.
மலர்கள் பொதுவாக மணக்கும். ஆனால், மலர்களில் சில துர்நாற்றம் அடிக்கும். சில மலர்களில் வாசமே இருக்காது.
மலர்கள் எல்லாம் மல்லிகையாகவோ. ரோஜாவாகவோ, இரவு ராணியாகவோ ஆகிவிட முடியாது. சில பழங்களுக்கு அதன் ருசியை மறைக்கக்கூடிய முரட்டு தோல் இருக்கும். அப்படி இல்லை என்றால் அந்த பழங்கள் மனிதனுக்கு கிடைத்திருக்காது என்பார்கள். அந்த முரட்டு தோலை கண்டு பழத்தை ஒதுக்கி விட்டால் பழத்துக்கு நஷ்டமில்லை. அதை சுவைக்க முடியாமல் போனவனுக்குத்தான் நஷ்டம்.
பெண்கள், பெரும் வரலாற்றுக்கு உரியவர்கள்தான். பெண்களில் பலர் போற்றவும் மதிக்கவும் தக்கவர்கள்தான். வீரர்களின் முதல் பாசறையே தாய்தான் என்பதில் சந்தேகமில்லை.
பெண்களில் சிலர், கொஞ்சம் வம்பும் பிடிவாதமும் உடையவர்களாக இருப்பார்கள். நிலவிலும் கிரகணம் நிகழ்கிறது அல்லவா? சூரியனும் சில சமயம் ஒளி மங்கத்தானே செய்கிறது. ஓடுகிற நதியும் சில நேரம் பள்ளத்தில் வீழ்ந்து, சிறிது நேரம் கழித்து, பள்ளம் நிரம்பி மீண்டும் ஓட தொடங்குகிறது.
இல்லற வாழ்க்கை இன்பமானதுவே. குடும்ப வாழ்க்கை இனிமையானதுதான். கணவன் மனைவி என்ற உறவு மிக சுவையானதுவே. அன்பும் காமமும் கலந்து, பாசமும் நேசமும் இணைந்து, உடலும் உயிரும் ஒட்டி உருவானதுதான் திருமண வாழ்க்கை.
உறவுகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாக்குக் கொடுத்து. உறுதிமொழி வாங்கி உருவாக்கப்பட்டதுதான் திருமண உறவு. முன் பின் பழக்கமில்லாமல், நேற்று இன்று அறிமுகமில்லாமல், நீண்ட நெடிய இரத்த உறவுகள் இல்லாமல் ஒரு சபையில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த உறவு இரு உடல்களை மட்டுமல்ல. இரு உயிர்களை ஒன்றோடு ஒன்று இணைத்து விடுகிறது. ஒருவர் மீது ஒருவருக்கு தேடலை ஏற்படுத்தி விடுகிறது. சொல்லால் வர்ணிக்க முடியாத அக்கறையை இருவரும் இடையில் ஏற்படுத்தி விடுகிறது. தன் மனைவியின் மீது கணவன் பைத்தியமாவதும், தன் கணவன் மீது மனைவி பைத்தியமாவதும் உலக வரலாற்றில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் வரத்தான் செய்யும். எல்லாமே இங்கு இன்பமாக ஆகிவிட்டால் மனிதனுக்கு சொர்க்கத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடுமே!
ஆணும் பெண்ணும் அவரவர் கடமைகளை செய்து தனது துணையோடு ஒத்து போகும்போது அலையில்லா கடலில் ஓடம் மென்மையாக மிதந்து இலக்கை நோக்கி சென்று சேர்வது போல வாழ்க்கையும் மிருதுவாக கடந்து கொண்டே இருக்கும்.
அன்பும், அரவணைப்பும், பாசமும், புரிந்துணர்வும், அடக்கமும், வெட்கமும், பெண்ணிடம் மிகுந்து காணப்பட வேண்டும். ஆணோ தன் வாழ்க்கைத் துணைக்கு செல்வத்தையும், நேரத்தையும் செலவளிப்பவனாக இருக்க வேண்டும். ஆண், தன் மனைவியை அடிக்காமல், அதட்டாமல், கருணையோடு பராமரிக்க வேண்டும்.
ஒத்து போகும்போதுதான் நெருக்கம் அதிகமாகிறது.
ஒத்து போகும்போது பாசம் கூடுகிறது.
ஒத்து போகும்போது குடும்பம் வலுப்பெறுகிறது.
உடலும் உடலும் இணையும்போது இன்பத்தின் எல்லையை அடைய முடிவது போன்று மனமும் மனமும் ஒத்து போகும்போது மகிழ்ச்சியின் எல்லையை அடைய முடியும்.
கணவன் மனைவி ஒத்து வாழும்போதுதான் இருவரில் ஒருவருக்கு மற்றவர் மீது காம ஆசையும் அதிகரிக்கிறது.
காமமானது, தம்பதியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியான, அன்பான வாழ்க்கை அமைய துணை செய்கிறது.
அது மட்டுமல்ல, அவ்வப்போது வந்து போகும் கசப்புகளை போக்கி வாழ்க்கையை இனிப்பாக்கி விடுகிறது.
அல்லாஹ்வே எங்களுக்கும் எங்கள் வாழ்க்கைத்துணைகளுக்கும் மத்தியில் நல்ல பொருத்தத்தை, ஒற்றுமையை ஏற்படுத்து! மறுமைக்காக வாழ்ந்த நல்லோரில் எங்களை ஆக்குவாயாக!
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!"
ஆமீன்.
Comments
Post a Comment
Best comment is welcomed !