நிறைகளை பார்ப்போம்! குறைகளை கண்மூடுவோம்!

 


நிறைகளை பார்ப்போம்! குறைகளை கண்மூடுவோம்!


உலகமே குறையுடையதுதான். மறுமைதான் நிறைவானதும் முழுமையானதுமாகும். எல்லோரிடத்திலும் பல நிறைகளும் சில குறைகளும் இருக்கும். குறைகள் இல்லா மனிதனை தேடுவது பீனிக்ஸ் பறவையை தேடி கண்டுபிடிப்பது போலத்தான்.


பிறர் குறைகள் நமக்கு நன்றாக தெரியும்! நமது குறைகள் நமக்கு தெரியாது. குறை சொல்வதும், குறை பேசுவதும், குறைகளை தேடுவதும் நமக்கு கைவந்த கலையாகும்.


நம்மிடத்தில் நூறு குறைகள் இருக்கும். அவை நமது கண்களுக்கு தெரியாது. பிறரிடம் ஒரே ஒரு குறை இருந்தாலும் அது நமது கண்ணில் பட்டுவிடும்.


அரபியில் அழகாக சொல்வார்கள்:


‎‫أَبْصَرُ النَّاسِ مَنْ أَبْصَرَ عُيُوبَهُ‬‎


மக்களில் நல்ல பார்வையுடையவர் யாரென்றால் தனது குறைகளை நோக்கியவரே!


எப்போதும் குறைகளை பேசுவதும், குறைகளை தேடுவதும், பரப்புவதும் கெட்ட குணமாகும். அத்தகையோரை அல்லாஹ் கண்டிப்பதுடன் அவர்களை எச்சரிக்கவும் செய்கிறான்.


புறம் பேசி குறைகூறி திரிவோருக்கு நாசம் உண்டாகட்டும்.21


நாம் ஒருவரை நேசித்தால், அவர் மீது அன்பு வைத்தால் அவரின் நிறைகள் நமக்கு அதிகமாகவும் குறைகள் குறைவாகவும் தெரியும். அல்லது குறைகள் தெரியாமல் போய்விடும்.


ஒருவர் மீது நாம் வெறுப்பு வைத்தால் அவரின் நிறைகள் குறைவாகவும் குறைகள் அதிகமாகவும் தெரியும். அல்லது குறைகள் மட்டுமே தெரியும்.


இமாம் ஷாஃபியி அவர்களின் ஓர் அரபுக் கவிதை இதை அழகாக நமக்கு சுட்டிக்காட்டுகிறது.


‎‫وَعَيْنُ الرِّضَا عَنْ كُلِّ عَيْبٍ كَلِيْلَةٌ وَلَكِنَّ عَيْنَ السُّخْطِ تُبْدِي الْمَسَاوِيَا‬‎


திருப்தியின் கண்ணோ எல்லா குறைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். அதிருப்தியின் கண்ணோ எல்லா குற்றங்களையும் வெளிப்படுத்தும்.


கணவன், மனைவி உறவு முறை சிறப்பாக, மகிழ்ச்சியாக, இன்பமாக, இனிமையாக அமைவதற்கு சில முக்கிய தத்துவங்களை, அழகிய கோட்பாடுகளை இருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.


அதாவது, ஒருவர் மற்றவரின் நிறைகளை பார்க்க வேண்டும். ஒருவர் மற்றவரின் குறைகளை தேடக்கூடாது. ஒருவர் மற்றவர் மீது குறை சுமத்தக் கூடாது.


கணவர் எங்கே செல்கிறார். யாரோடு பேசுகிறார், அவரின் போனில் யாருடைய நம்பர் இருக்கிறது என்று துருவி துருவி ஆராயக்கூடாது. நல்லெண்ணம் வைக்க வேண்டும். சந்தேக கண் இருந்தால் எல்லாம் குற்றமாகவும் குறையாகவும் தெரியும்.


21. அல்குர்ஆன் 104 1.              கணவனும் மனைவியிடம் குறைகளை தேடக் கூடாது. அவள் நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று அவளின் சொல்லையும் செயலையும் குற்றக்கண் கொண்டே பார்க்கக் கூடாது. அவளது பேச்சுகளுக்கு தப்பான அர்த்தங்களை கொடுத்து, கெட்ட நோக்கத்தை கற்பித்து, பிரச்சனைகளை உருவாக்கக் கூடாது.


மனைவி எதை சமைத்தாலும் அதில் குறை சொல்வது. மனைவியின் ஒவ்வொரு செயலையும் குற்றக்கண்ணோடு பார்ப்பது. எப்படா அவள் தப்பு செய்வாள். அதை நாம் கண்டுபிடிக்கலாம் என்று சி.ஐ.டி வேலை பார்க்கக் கூடாது.


இன்றைய காலகட்டம் எப்படி இருக்கிறது என்றால், ஒருவர் மற்றவர் மீது குறை சொல்வது. பழிபோடுவது. ஒருவருடைய குறையை தோண்டி துருவி ஆராய்வது இப்படியாக குறை பேசுவதும், குற்றம் சுமத்துவதுமே வாழ்க்கையாக ஆகிவிட்டது.


காலையிலிருந்து மாலை வரை, பிறகு மாலையிலிருந்து காலை வரை குறை சொல்லிக் கொண்டே இருப்பது பொழுதுபோக்காக ஆகிவிட்டது.


மனைவி சமைப்பதில் குறை, மனைவி ஆடை அணிவதில் குறை, மனைவியின் உடல் அமைப்பை பற்றி குறை. மனைவியின் குடும்பத்தார்களைப் பற்றி குறை, மனைவியின் சகோதரர்களைப் பற்றி குறை, இப்படியாக கணவன் மனைவியைப் பற்றி குறை சொல்வதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறான்.


அதுபோன்று மனைவியும் தன் கணவனைப் பற்றி குறை பேசுகிறாள். கணவனின் பிள்ளைகளைப் பற்றி, அல்லது கணவனின் தாய் தந்தையரைப் பற்றி, கணவனின் சகோதர சகோதரிகளைப் பற்றி, அல்லது கணவனுடைய சொல், செயலைப் பற்றி இப்படியாக இருவருமே எப்போது பேசினாலும் சரி ஒருவரைப் பற்றி ஒருவர் குறை சொல்வது இன்றைய வாழ்க்கையின் வாடிக்கையாகி விட்டது.


தனியாக இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, இப்படியாக குறைபேசிக்கொண்டே இருக்கின்ற காரணத்தால் ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. பிறகு, பார்ப்பதற்கு வெறுப்பு, பேசுவதற்கு வெறுப்பு. நெருங்கி பழகுவதற்கு வெறுப்பு என்று வாழ்க்கை வெறுப்பால் நிரம்பிவிடுகிறது.


ஏனென்றால், இவளிடத்தில் நாம் பேசினாலே இவள் தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருப்பாள் என்று கணவன் மனைவிடம் பேசுவதை விட்டு தூரமாகி விடுகின்றான். அதுபோன்று. கணவன் தன்னை எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான் என்று அவனை விட்டும் மனைவியும் விலகி சென்று விடுகின்றாள். கடைசியாக இந்த தூரமானது இருவருக்கும் மத்தியில் மிக அதிகமாகி விடுகிறது.


வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக சுவைத்து, இன்பமாக, சந்தோஷமாக, குதூகலமாக வாழ வேண்டுமோ அத்தகைய வாழ்க்கையை கணவன் மனைவி இருவருமே தொலைத்து விடுகிறார்கள்.


பிறகு, இவர்களுக்கு செல்போன் பார்ப்பதே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. சினிமாவும் டிவியும் வாழ்க்கையாகி விடுகிறது. இப்படியாக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தடம் புரளுவதை பார்க்கின்றோம். இன்று பலர் சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகி அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். முன்பெல்லாம் சீரியல்களில் பெண்கள் மூழ்கி கிடப்பார்கள். இன்றைய காலத்தில் ஆணும் பெண்ணும் முக நூலில், அல்லது இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிடுகிறார்கள்.


கணவனும் மனைவியும் கொஞ்சி குலாவி, பேசி, சிரித்து, சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள் ஹாய், ஹாய், பை, பை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.


ஒரே வீட்டில், ஒரே ரூமில் வசித்தாலும், சில சமயம் இரவு உறவுகள் இருந்தாலும் கூட இருவரும் மனம் விட்டு சிரித்து பேசுவதோ, பேசி மகிழ்வதோ இல்லாமல் போய்விடுகிறது.


பேசினாலே பிரச்சனை வருகிறது என்று இருவரில் ஒவ்வொருவரும் சொல்வதை பார்க்க முடிகிறது. ஒருவரின் பேச்சை மற்றவர் பாசிடிவாக எடுப்பதே இல்லை. எல்லா பேச்சுக்கும் நெகடிவ் மீனிங் கொடுப்பதே இருவருக்கும் வழக்கமாக ஆகிவிட்டது. ஒவ்வொரு பேச்சிலும் குறைகாண்பதும் குற்றம் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது.


அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய சிறிய உதாரணத்தை உங்களுக்கு நான் நினைவு கூறுகிறேன்.


நபி அவர்களுக்கு முன் உணவு வைக்கப்பட்டால் அது அவர்களுக்கு பிடித்தால் சாப்பிடுவார்கள். இல்லை என்றால் விட்டு விடுவார்கள்.


எந்த ஓர் உணவையும் அவர்கள் குறை கூறியது கிடையாது என்பதாக நாம் ஹதீஸ்களில் பார்க்கின்றோம். 2


நபி அவர்களின் பொது வாழ்க்கையிலும் சரி, நண்பர்களுடன் பழகும் போதும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, யாரைப் பற்றியும் குறை பேசாமல் அவர்களின் நிறைகளை பற்றி மட்டுமே பேசுவது அவர்களின் வழக்கமாக, பண்பாக. வழமையாக இருந்தது.


இன்று இந்த நல்ல பண்பு நமது குடும்பங்களில் தவறிவிட்டது. கணவனும் மனைவியும் இந்த ஒரு நல்ல பண்பை கடைப்பிடிப்பதில்லை. கணவனுக்கு முன்னாலும் கணவனை பற்றி குறை, கணவனுக்கு பின்னாலும் கணவனை பற்றி குறை, தனது தோழிகளிடத்தில் கணவனைப் பற்றி குறை, தனது குடும்பத்தாரிடத்தில் கணவனைப் பற்றி குறை இப்படியாக மனைவி குறை கூறிக்கொண்டே இருக்கிறாள்.


22. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா .நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 3563.         அதுபோன்றே கணவனும் மனைவி மீது திருப்தியே படுவதில்லை. மனைவியின் சொல்களையும் செயல்களையும் குற்றக் கண்ணாடி கொண்டே பார்க்கிறான். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லும்போது அவர்களின் வாழ்க்கையில் மனத்தூய்மை என்பது எடுபட்டு விடுகிறது; இருவரின் உள்ளத்தில் அன்பு வற்றி விடுகிறது; பாசம் காய்ந்து விடுகிறது; நேசம் திசை மாறிவிடுகிறது.


எந்த இடத்தில் இக்லாஸ் - மனத்தூய்மை எடுபட்டு விடுமோ அங்கு அல்லாஹ்வின் பரக்கத் இல்லாமல் போய் விடுகிறது.


இக்லாஸ் என்பது வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல, கணவன் மனைவிக்கு மத்தியிலும் இக்லாஸ் இருக்க வேண்டும். அதாவது, மனைவியை அல்லாஹ்விற்காக ஏற்றுக் கொண்டு உண்மையான அன்பை கொடுக்க வேண்டும். அப்படித்தான் மனைவியும் கணவனை அல்லாஹ்விற்காக ஏற்றுக் கொண்டு, உண்மையான அன்பை கொடுக்க வேண்டும்.


எப்போது அவர்கள் தங்களுக்கு மத்தியில் குறை சொல்வார்களோ, பழி போடுவார்களோ, பிறரின் குறையை தேடுவார்களோ அப்போது இந்த அன்பு அவர்களுக்கு மத்தியில் கானல் நீராக ஆகி விடுகிறது.


ஆகவே, இந்த பழக்கத்தை நாம் உடனடியாக மாற்ற வேண்டும். அழகிய வார்த்தைகளை. கண்ணியமான பேச்சுகளை பேச வேண்டும். ஒருவர் மற்றவரின் நிறைகளை, உயர்வுகளை. சாதனைகளை, நன்மைகளை புகழ்ந்து பேச வேண்டும்.


குறைகள் சில இருந்தாலும் அவற்றை கண்டும் காணாமல் செல்வது மட்டுமல்ல, அந்தக் குறைகளை அழகிய முறையில் மாற்றுவதற்கு நல்ல முறைகளை கையாள வேண்டும்.


குறைகளை மறைப்பது ஸுன்னாவாகும். குறைகளை பகிரங்கப்படுத்தி அவமானப்படுத்துவது குற்றமாகும். 

அறிவிப்பாளர்:

அப்துல்லாஹ் இப்னு உமர்

.நூல்: ஸஹீஹுல் புகாரி 2442.     இங்கு குறைகள் என்று நாம் குறிப்பிடுவது ஒரு பொதுவான வார்த்தையாகும். குறைகள் மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட செயல்களாக இருக்கலாம். அல்லது சிறு பாவங்களாக இருக்கலாம். அல்லது பெரும் பாவங்களாக இருக்கலாம். அல்லது அதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் ஒருவரில் ஒருவருக்கு பிடிக்காத செயலாக இருக்கலாம்.


நமக்கு பிடிக்காத காரியங்களில் நாம் பெருந்தன்மையாக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு பிடிக்காத காரியமாக இருந்தால் அதை உடனே முடிந்தளவு விரைவாக திருத்த சரி செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால், இன்று நாமோ மாற்றமாக இருக்கிறோம். அல்லாஹ்வின் விஷயத்தில் அலட்சியமாகவும் நமது விஷயத்தில் மிக கராராகவும் நடந்து கொள்கிறோம்.


இதுவே நமக்கு அல்லாஹ்வின் பரகத்தும் ரஹ்மத்தும் குடும்பத்தில் இல்லாமல் போவதற்கு காரணமாக ஆகிவிடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.


அல்லாஹ்வே! எங்கள் துணைகளை எங்களுக்கு மன நிறைவாக ஆக்கிவை! அவர்கள் மூலமாக எங்களுக்கும் எங்கள் மூலமாக அவர்களுக்கும் மன நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் கண் குளிர்ச்சியையும் தருவாயாக! எங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஒருங்கிணைப்பை தா!


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”


ஆமீன்.

Comments