தர்க்கம் தவிர்ப்போம்!

 


தர்க்கம் தவிர்ப்போம்!


திருமணம் செய்ய முடிவு செய்திருக்கும் என் சகோதர சகோதரிகளே! மணம் முடித்து இல்லற வாழ்வில் இருக்கிற என் சகோதர சகோதரிகளே! ஒரு முக்கிய செய்தியை நீங்கள் அறிய வேண்டும். அதை வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அது ஒரு முக்கிய காரணமாகும்.


அது என்ன? ஆம். அதுதான் தர்க்கம் செய்வதையும், வாக்குவாதம் செய்வதையும், விதண்டாவாதம் பேசுவதையும், ஏட்டிக்குப்போட்டிக்கு பதில் பேசுவதையும், குதர்க்கம் செய்வதையும் விட்டு விலகி இருப்பதாகும்.


அன்பு மலர வேண்டுமென்றால் ஒருவர் பேசுவதை ஒருவர் செவியுற வேண்டும். ஒருவர் பேசும்போது காது கொடுக்க வேண்டும். அதில் உள்ள நியாயத்தை ஏற்க வேண்டும். அதில் உள்ள உண்மையை மறுக்கக் கூடாது. பிரச்சனைக்கு தீர்வு உண்மையை மறைப்பதோ, மறுப்பதோ அல்ல. உங்கள் மனைவி அல்லது உங்கள் கணவர் உங்களிடம் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக் கொண்டு உங்களை திருத்த முயற்சி செய்யுங்கள்.


ஏற்றுக்கொள்பவருடைய கண்ணியம் கூடுமே தவிர குறைவதில்லை.


சரி, இருவரில் ஒருவர் மற்றவரின் குறையை சொல்லும்போது அவர் அதை திருத்திக்கொள்ள, தன்னை மாற்றிக்கொள்ள தேவையான அளவு கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்பவே நீ இதை விட வேண்டும், இப்பவே நீ இதை செய்து முடிக்க வேண்டும் என்று ஒருவர் மற்றவர் விஷயத்தில் அடம் பிடிக்க கூடாது. நாம் சொல்வது பெரும்பாவம் பற்றி அல்ல. பொதுவான செயல்கள், நடத்தைகள், பழக்கவழக்கங்கள் போன்ற விஷயங்களை பற்றியாகும்.


ஒவ்வொரு விஷயத்தையும் பிரச்சனையாக ஆக்கி அது சம்பந்தமாக விவாதம் செய்வது, தர்க்கிப்பது, வாய் சண்டை செய்வது, குடும்ப உறவில் ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடும். வெறுப்பு தோன்றுவது கண்ணாடியில் வெடிப்பு விழுவதை போல. ரொம்பவும் ஆபத்தானதாகும்.


சச்சரவு செய்வது வாய்க்கு இன்பமாக இருக்கும் உடலுக்கு சொறிவது இன்பமாக இருப்பதை போல. பிறகுதான் தெரியும் எரிச்சலும் வேதனையும். அப்படித்தான் சும்மா சும்மா சண்டை செய்வதும், விதண்டாவாதம் செய்வதும், சச்சரவு செய்வதும் பெரும் மன வேதனைக்கு வழி வகுத்துவிடும்.


தர்க்கம் செய்வது ஒரு கெட்ட குணமாகும். நமது பாசமிகு நபியவர்கள் இதை வெறுத்துள்ளார்கள். இதை விடுவதற்கு ஆர்வமூட்டி இதை தவிர்ப்பவருக்கு சொர்க்கத்தின் நற்செய்தியை கூறி இருக்கிறார்கள்.


நபி அவர்கள் கூறினார்கள்: தர்க்கத்தை விடுபவருக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டுக்கு நான் பொறுப்பாளர் ஆவேன். 5


ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய பின்னர் தர்க்கம் செய்யக்கூடாது " 16 என்று அல்லாஹ் கூறியதிலிருந்து உடன் பயணிக்கிற


15. அறிவிப்பாளர்: அபூ உமாமா அல்பாஹிலி .நூல்: ஸுனன் அபூதாவூது, எண்: 4800.

அல்குரான் 

16. 2: 197.                     பயணிகளுக்கு இடையில் தர்க்கம் என்பது பயணத்தை கசப்பாகவும், நெருக்கடி மிக்கதாகவும், வெறுப்பாகவும் ஆக்கிவிடும் என்று எச்சரிக்கிறான்.


சிறிய ஒரு பயணத்திலேயே இப்படி என்றால் கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையோ ஒரு நீண்ட பயணமாகும். ஆகவேதான் மனைவிக்கு வாழ்க்கை துணைவி என்றும். சகதோழி என்றும், வாழ்க்கையின் கூட்டாளி, பங்காளி என்றும் இப்படி பல பெயர்கள் உள்ளன.


சிறிய பயணத்தையே தர்க்கத்திலிருந்து பாதுகாத்து பயணத்தை மகிழ்ச்சியாக, இன்பமாக, சுகமாக, சுபிட்சமாக, ஆனந்தமாக, ஆரோக்கியமாக, அழகாக. அற்புதமாக ஆக்குங்கள் என்று அல்லாஹ்வின் கட்டளை நமக்கு கற்பித்து கொடுக்கும்போது வாழ்க்கையின் நீண்ட பயணமாகிய மணவாழ்க்கையை நாம் எப்படி கண்ணும் கருத்துமாக இந்த தர்க்கம் என்ற ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.


ஆம், தர்க்கம் என்பது நட்பையும், உறவையும் கலங்கப்படுத்தி நிம்மதியை போக்கக்கூடிய ஒரு கெட்ட அனல் காற்றாகும்.


தர்க்கம் செய்வதற்கு உதாரணமாவது. ஓர் அழகிய வீட்டை கடப்பாறையால் சேதப்படுத்துவது போலாகும். ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையோடு தர்க்கம் செய்கிற போதெல்லாம் உங்களது வீட்டை நீங்கள் உடைக்கிறீர்கள். ஆம், உங்களுக்கு இடையில் அன்பினால், பாசத்தினால் கட்டப்பட்ட நல்ல அழகான இல்லறம் என்ற வீட்டை நீங்கள் இடிக்கிறீர்கள். நீங்களாக உருவாக்கிய இல்லறம் என்ற சோலைக்கு நீங்களே தீ மூட்டுகிறீர்கள். ஒருவர் மற்றவரின் மனதை காயப்படுத்துகிறீர்கள்.


கணவன் மனைவிக்கு இடையில் வேறுபட்ட கருத்துகள் வரலாம். அவை முரண்பாடாக இல்லாத வரை பிரச்சனை

இல்லை. அப்படியே இருவரும் இரு மாறுபட்ட கருத்தில் இருந்தால் யாராவது ஒருவர் உடனடியாக தனது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவரின் கருத்தோடு இணக்கம் கண்டு விட வேண்டும்.


நீங்கள் உங்கள் மனைவி மீது ஆழமான உண்மையான பாசம் வைத்திருந்தால் அவளோடு எப்படி வாக்குவாதம் செய்ய மனம் வரும்? அவளை நீங்கள் நேசிப்பவராக இருந்தால் அவளின் பேச்சை மறுத்து பேசி விதண்டாவாதம் பேசவோ, வீண் குதர்க்கம் செய்யவோ உங்களுக்கு மனம் வருமா?


அப்படித்தான் மனைவிக்கும் சொல்கிறேன். கணவனை உண்மையாக மதிப்பவள் எப்படி அவனை எதிர்த்து பேசுவாள்? கணவன் மீது கண்ணியமும் மரியாதையும் உள்ளவள் தனது கணவனின் பேச்சை மறுத்து பேசுவாளா? கணவனின் கருத்து சரியாக இருக்கும்போது அதில் தர்க்கம் செய்ய எப்படி அவளுக்கு மனம் வரும்? அப்படியே அவனின் கருத்து தவறாக இருந்தாலும் மனைவியாகிறவள் அன்பாக பண்பாக அடக்கமாக கணவனுக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர சண்டை செய்யக் கூடாது. தர்க்கம் செய்யக் கூடாது.


நபி அவர்கள் ஒருபோதும் தர்க்கத்தை விரும்ப மாட்டார்கள். தர்க்கம் செய்வது அல்லாஹ்விற்கும் பிடிக்காத குணமாகும்.


உங்கள் கணவன் உங்களை மதிக்க வேண்டுமென்றால் அவருடன் தர்க்கம் செய்யாதீர்கள்!


உங்கள் மனைவி உங்களை போற்ற வேண்டுமென்றால் அவளுடன் தர்க்கத்தை தவிர்த்து பாருங்கள்.


எத்தனையோ அன்பான குடும்பத்தை தர்க்கம் மன கசப்பில் தள்ளியது. மன கசப்பு மண விலக்கில் தள்ளியது.


பணிவான மனைவி ஒருபோதும் கணவனுடன் தர்க்கம் செய்ய மாட்டாள். பாசக்கார மனைவி தனது கணவனிடம் சச்சரவு செய்து, அவனது மனதை காயப்படுத்தவோ அவனது உள்ளத்தை உடைக்கவோ மாட்டாள். தனது கருத்து கணவனின் கருத்துக்கு மாற்றமாக இருந்தாலும் அதை நயமாக அன்பாக பொறுமையாக எடுத்து சொல்வாள். அவன் அதை ஏற்றுக்கொண்டால் அல்ஹம்துலில்லாஹ். இல்லை என்றால் அவளது பொறுப்பை அவள் நிறைவேற்றி விட்டாள். அவள் மீது குற்றமில்லை.


இங்கு இன்னொரு முக்கியமான செய்தியையும் கவனிக்க வேண்டும். அதாவது கணவன் மனைவி இருவருக்கும் ஈகோ இருக்கக் கூடாது. பிரிஸ்டிஜ் பார்க்கக் கூடாது. யார் முதலாவதாக நல்லதை சொன்னாலும் மற்றவர் அதை அங்கீகரிக்க வேண்டும். நீ சொன்னதை நான் கேட்க வேண்டுமா? எனக்கு தெரியாதா? என்னை விட உனக்கு அதிகம் தெரியுமா? இப்படியான போட்டி மனப்பான்மை கணவன் மனைவிக்குள் வரக் கூடாது.


கணவன், மனைவி இருவரும் தர்க்கம் செய்வதற்கு உதாரணம் எப்படி என்றால் கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப்பட்டு குளிரூட்டப்பட்ட ஏசி அறையில் நெருப்பு எரிப்பது போலாகும்.


பஞ்சு மெத்தையில் படுத்து தூங்கும்போது நெருப்பு விளக்கை அருகில் வைப்பதற்கு சமமாகும்.


எரிமலைகள் ஒரே சமயத்தில் எடுத்த எடுப்பிலேயே வெடித்து சிதறி அழிவை ஏற்படுத்துவது இல்லை. முதலில் குமுறும். குமுறுதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். பிறகுதான் அது வானுயர வெடித்து சிதறி பேராபத்தை உண்டாக்கும். அப்படித்தான் தர்க்கம் என்பதும்.


இன்னும் பல உதாரணங்களை கூறலாம்.


நமது ரப்பும், நமது நபி அவர்களும் தர்க்கம் வேண்டாம் என்று கூறிய அறிவுரையே நமக்கு போதும்.     

இன்றிலிருந்து தர்க்கத்தை தவிர்த்து விடுங்கள். ஏட்டிக்கு போட்டி பேசுவதை நிறுத்தி விடுங்கள்! எதிர்த்து பேசுவதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! மறுத்து பேசுவதை மறந்து விடுங்கள்! சச்சரவு செய்வதை விட்டு விலகிவிடுங்கள்! குதர்க்கம் பேசுவதை மறந்து விடுங்கள்! புழுதி காற்றி வீசினால் அதை எதிர்க்க நீங்களும் புழுதி அள்ளி வீசுவீர்களா? முகத்தை மூடி ஓரமாக ஒதுங்கி உங்களை பாதுகாத்து கொள்வீர்கள்தானே! அப்படித்தான் ஒருவர் வாக்குவாதத்தை தொடங்கினால், சர்ச்சையை ஆரம்பித்தால் உடனே ஒதுங்கி விடுங்கள்! உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்!


ஒருவர் பேசுவதை மற்றவர் கேளுங்கள்! ஒருவருக்கு மற்றவர் செவிகொடுங்கள்! ஒருவர் பேசுவதை மற்றவர் ரசியுங்கள்! அன்பாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள்!


இப்படி செய்து பாருங்கள்! வாழ்க்கையில் மகிழ்ச்சி மழை எப்படி பொழிகிறது என்று பிறகு பாருங்கள்!


ஒருவரின் பேச்சு பிடித்தால், உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தர்க்கம் செய்யாமல் வாய்மூடி மௌனமாக அமைதி காத்துவிடுங்கள். வாழ்க்கையில் நிம்மதியின் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும்.


அல்லாஹ் மிக அறிந்தவன்.


அல்லாஹ்வே எங்களுக்கும் எங்கள் வாழ்க்கை துணைகளுக்கும் மத்தியில் அன்பையும் பாசத்தையும் ஒற்றுமையும் தா!


மன கசப்பில்லாத. உள்ளத்தில் வெறுப்பில்லாத. சண்டை சச்சரவு இல்லாத, அன்பான, பாசமான, நெருக்கமான, நேரான, ஒற்றுமையான, நேர்மையான நல்ல வாழ்க்கையை எங்களுக்கு தா!


ஷைத்தான் எங்களுக்குள் குழப்பத்தை, மன கசப்புகளை, சச்சரவை, பிளவுகளை, வெறுப்புகளை, பிரிவினைகளை  ஏற்படுத்துவதை விட்டு எங்கள் மன வாழ்க்கையை காப்பாற்றுவாயாக!


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”(அல்குரான் )



ஆமீன்.

Comments