அன்னை ஆயிஷா (ரலி)
கேள்வி : அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தபோது நபி (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்து கொண்டார்களா?
பதில்: இல்லவே இல்லை! அதுபோன்றே ஹல்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மரணமாகும் வரை ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கேள்வி : நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டபோது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வயது என்ன?
பதில்: இவர்கள் ஹல்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் மகள் ஆவார்கள். இவர்களுக்கு ஏழு வயது ஆகியிருந்த பொழுது திரு மக்காவில் நபி (ஸல்) அவர்களை மணந்தார்கள்.
ஹிஜ்ரத்துச் செய்த எட்டாம் மாதத்தில் அதாவது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஒன்பது வயது நிரப்பமான பொழுது தான், நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "ஒரு மலக்கு வெண்பட்டுத் துணியில் மறைந்து,உன் உருவத்தை என்னிடம் கொண்டு வந்து, இது தங்க ளுடைய மனைவி' என்று என்னிடம் கூறினார். நான் துணியை நீக்கி முகத்தைப் பார்த்தேன். அது முற்றிலும் உன் முகமாகவே இருந்தது.
"நான் இதனைப் பார்த்து விட்டு, இது இறைவன் சார்பாக இருந்தால், அதற்குரியதை அவனே நிறைவேற்றுவான் என்று கூறினேன். இவ்வாறு மூன்று இரவுகள் தொடர்ந்து கனவில் கண்டேன்" என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியதாக ஹதீஸில் வந்துள்ளது.
கேள்வி: அன்னை ஆயிஷா (ரலி) எத்தனையாம் வயதில் இறந்தார்கள்?
பதில்: முஆவியா (ரலி) அவர்களின் கிலாபத்துடைய இறுதி நாட்களில், ஹிஜ்ரி 58-ம் வருடம் தம்முடைய 67-ம் வயதில் திருமதீனாவில் காலமானார்கள்.
கேள்வி: அக்காலத்தில் திரு மதீனாவில் கவர்னராக இருந்தவர் யார்?
பதில்: மர்வானுப்னுல் ஹக்கம் என்பவர் கவர்னராக இருந்தார். அவர் திரு மக்காவுக்கு உம்ரா செய்வதற்குச் சென்றபோது, அபூஹுரைரா (ரலி) அவர்களைத் தமக்குப் பதிலாக மதீனாவின் ஆளுனராக நியமித்து விட்டுச் சென்றனர்.
அச்சமயம் ஆயிஷா (ரலி) அவர்கள் இறந்து போனதால் ஆயிஷா (ரலி) அவர்களின் ஜனாஸாவை ஹல்ரத் அபூஹுரைரா (ரலி) தொழ வைத்தார்கள். பின்னர் அன்னை ஆயிஷா ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
கேள்வி: அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள் என்ன?
பதில்: இவர்கள் ஆழமான கடலைப் போன்று இல்மு - கல்வியைப் பெற்றிருந்தார்கள். மேலும் இவர்கள் 2210 நபி மொழிகளாகிய ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்.
மேலும், இவர்கள் மிகவும் நினைவாற்றல் உள்ளவர்களாகவும், நுண்ணறிவும், ஆராய்ச்சித் திறனும் பெற்றவர்களாகவும், இஸ்லாத்துக்கு முந்தைய அரபுக் கவிதைகள் பலவற்றை மனனம் செய்தவராகவும் இருந்தனர். மேலும் ஹதீஸிலும், இஸ்லாமியச் சட்டக் கலையிலும் இவர்கள் விரிந்த ஞானம் பெற்றிருந்தார்கள்.
கேள்வி: இவர்களுக்குக் குழந்தைகள் உண்டா?
பதில்: இல்லை.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கொடைத்தன்மை
கேள்வி: அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கொடைத்தன்மை எத்தகையது?
விடை: ஒரு முறை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் இடத்திற்குப் பயணம் செய்து விட்டுத் திரும்பிவரும் பொழுது, ஓர் இடத்தில் தங்கினார்கள். அச்சமயம் அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் வாயிலில் ஓர் ஏழை யாசகம் கேட்டார்.
அன்னை அவர்கள் ஒரு ரொட்டித் துண்டை அந்த ஏழைக்குக் கொடுத்தார்கள். அதன் பின்னர் இன்னொரு மனிதர் குதிரையில் அமர்ந்தவராகத் தமக்குப் பசிக்கிறது என்று கூறினார்.
பணியாளை அழைத்து, குதிரையில் இருப்பவரை ஓர் இடத்தில் அமர வைத்து அவருக்கு வயிறு நிரம்ப உணவு கொடுத்து அனுப்புமாறு ஏவினார்கள்.
இதைக் கண்ட மக்கள், “அன்னையே! யாருக்கு அதிகமான உதவி செய்ய வேண்டியிருந்ததோ தாங்கள் அவருக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்து அனுப்பி விட்டீர்கள்.
"ஆனால், இப்பொழுது குதிரையின் மீது அமர்ந்து வந்து யாசகம் கேட்டவருக்கு வயிறு நிரம்ப உணவு கொடுக்குமாறு பணித்தீர்களே, என்ன காரணம்? என்று கேட்டனர்.
அதற்கு அன்னை அவர்கள், "அந்த ஏழை ஒரு ரொட்டியைக் கொண்டு மகிழ்ச்சியடைந்தார், இவரோ அவ்வாறு திருப்தி கொள்ளமாட்டார். ஒவ்வொரு மனிதனின் தரத்துக்குத் தக்கவாறு மதித்து நடக்க வேண்டும்.
"எல்லாம் வல்ல அல்லாஹ்கூட எல்லோருக்கும் ஒரே விதமாக சமத்துவம் அளிக்கவில்லை" என்று சமாதானம் கூறினார்கள்.
இன்னும் கேளுங்கள்! அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அணிந்திருந்த ஆடையில் பல ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அந்நிலையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஐம்பதினாயிரம் திர்ஹம்களையும் அல்லாஹ்வின் பாதையில், அவனின் திருப்தியை எதிர்பார்த்து அவற்றை ஏழை எளியவர்களுக்கு அவர்கள் ஸதகாச் செய்து விட்டார்கள்.
உலகத்தின் ஆசாபாசத்தில், அதன் ஏமாற்று வலையில் சிக்கிக் கொண்டவர்கள், பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாகத் தங்கள் மறுமை வாழ்க்கையையும் மறந்து வாழ்ந்து வருகின்றனர். என்னே இவர்களின் அறியாமை!
இன்னொரு நிகழ்ச்சியைக் கேளுங்கள்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உண்பதற்கு ஒரு ரொட்டித் துண்டைத் தவிர வேறு எதுவுமில்லை. அச்சமயம் ஒரு பிச்சைக்காரர் குரல் கொடுத்தார். அன்னையார் அவர்கள் பணிப் பெண்ணை அழைத்து, ‘அந்த ரொட்டியை அந்த யாசகருக்குக் கொடுத்து விடு' என்றார்கள்.
'மாலையில் எதைக் கொண்டு நோன்பு திறப்பீர்கள்' என்று பணிப் பெண் கேட்டார். அந்த ரொட்டியை அவருக்குக் கொடுத்து விடு' என்று கோபமாகக் கூறினார்கள். மாலை நேரம் வந்ததும், ஓர் இடத்திலிருந்து ஆட்டு இறைச்சி வந்தது. அச்சமயம், "அல்லாஹ் ரொட்டியை விட உயர்ந்த பொருளைக் கொடுத்துவிட்டான்" என்றார் பணிப்பெண்.
என்னே அன்னையாரின் தவக்கல் - இறை நம்பிக்கை!
எவருக்கு அல்லாஹ்வின் மீது தவக்கல் இருக்குமோ, அவரைத் தேடி எல்லாம் வரும். எவரிடம் இறை நம்பிக்கை இருக்காதோ, அவரை விட்டு எல்லாம் போய் விடும்.
Comments
Post a Comment
Best comment is welcomed !