.
அன்னை உம்மு ஹபீபா (ரலி)
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் ஐந்தாம் மனைவி யார்?
பதில்: அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்களாவர்.
கேள்வி: அன்னையாரின் இயற்பெயர் என்ன?
பதில்: ரமலா என்பது இவர்களின் இயற்பெயராகும்.
கேள்வி: இவர்களின் தந்தையின் பெயர் என்ன?
பதில்: அபூஸுஃப்யானுப்னு ஹர்ப் (ரலி) என்பதாகும்.
கேள்வி: இவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில்: ஸபிய்யா பின்த் அபுல் ஆஸ் என்பதாகும்.
கேள்வி: அன்னையார் அவர்கள் எப்பொழுது பிறந்தார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைப்பதற்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பிறந்தார்கள்.
கேள்வி: நபி (ஸல்) அவர்களை அன்னையார் எப்படி மணந்தார்கள்?
பதில்: இதோ! அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் வாய் மூலமே கேட்போம்:
"நான் உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அவர்களின் மனைவியாக இருந்தேன். அவர் அபீஸீனியாவில் இறந்து விட்டார். பின்னர் என்னை அபீஸீனிய அரசர் நஜ்ஜாஷி அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நாலாயிரம் திர்ஹங்கள் வைத்து (அதனைத் தாமே எனக்குத் தந்து) மணமுடித்துக் கொடுத்து ஷுரஹ்பீல் இப்னு ஹஸன் என்பவரோடு, என்னை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும் (என்னைத் தங்களின் மனைவியாக) ஏற்றுக் கொண்டனர்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி), நூல்: நஸாயீ
கேள்வி : திருமணத்தின் பொழுது இவர்களின் வயது எத்தனை?
பதில்: திருமணத்தின் போது அன்னையின் வயது 36.
கேள்வி: அன்னையார் எத்தனையாம் வயதில் இறந்தார்கள்?
பதில்: தங்களின் 72-ம் வயதில் ஹிஜ்ரி 44-ம் வருடம் திரு மதீனாவில் காலமானார்கள்.
கேள்வி: இவர்களின் சிறப்புக் குணங்கள் யாவை?
பதில்: அன்னை அவர்கள் ஈமானில் உறுதி மிக்கவர்களாகவும், இக்லாஸ் என்னும் தூய்மை எண்ணம் கொண்டவர்களாகவும், தீரமிக்கவர்களாகவும் இருந்தனர்.
ஒரு முறை அன்னை அவர்களின் தந்தை அபூஸுப்யான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் மதீனாவுக்கு வந்திருந்தார். தம் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களைக் காண வேண்டும் என்ற ஆசையினால் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு நபி (ஸல்) அவர்கள் அமர்வதற்காக விரிக்கப்பட்டிருந்த போர்வையில் அவர் அமர்ந்தார். உடனே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் தந்தை அமர்வதற்கு முன் வெடுக்கென்று அவ்விரிப்பைச் சுருட்டி எடுத்து விட்டார்கள்.
மகளின் இச்செயல் கண்டு கடுஞ்சினம் கொண்டவராக, "உன்னிட முள்ள விரிப்பு உன் தந்தையை விட உயர்வானதா?" என்று கேட்டார்.
"இது அல்லாஹ்வின் தூதர், நபி (ஸல்) அவர்கள் அமர்வதற் கென்றே உரிய விரிப்பாகும். அதில் உம்மைப் போன்ற ஒரு 'முஷ்ரிக்' அமர்வதற்குத் தகுதியில்லை" என்றனர்.
இதைக் கேட்ட அபூஸுஃப்யான் 'நீ என்னை விட்டுப் பிரிந்தபின் மிகவும் மாற்றம் அடைந்து விட்டாய்' என்று கூறி மவுனமாகி விட்டார்.
மேலும், அன்னை அவர்கள் நபில் வணக்கங்களை அதிகம் தொழுபவர்களாக இருந்து வந்தனர்.
6.அன்னை ஸவ்தா (ரலி)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களை எப்பொழுது திருமணம் செய்து கொண்டார்கள்?
பதில்: நபி (ஸல்) அவர்கள் இவர்களை, ஹிஜ்ரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
கேள்வி: இவர்கள் யாருடைய மகளார்?
பதில்: இவர்கள் ஜும்ஆ என்பவரின் மகளாவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களின் முப்பாட்டனாரான ஹாஷிம் அவர்களின் மனைவி ஸல்மானின் சகோதரர் கைஸ் என்பவரின் மகளாவார்.
கேள்வி: அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் ஏற்கெனவே திருமணம் ஆனவரா?
பதில்: ஆம்! ஸக்ரான் இப்னு அமர் என்பவரை முதலில் திருமணம் செய்திருந்தார்கள். இவர்கள் தம் கணவர் ஸக்ரான் (ரலி) அவர்களுடன் அபீஸீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். சென்ற இடத்தில் கணவர் இறந்து விட்டதால் உம்முல் முஃமினீன் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்துக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் இவர்களைத் திரு மக்காவில் திருமணம் செய்து கொண்டனர்.
கேள்வி: திருமணத்தின் போது ஸவ்தா (ரலி)யின் வயது எவ்வளவு?
பதில்: அன்னையாரின் வயது ஐம்பது.
கேள்வி: இவர்கள் எந்த ஆண்டு மரணமானார்கள்?
பதில்: இவர்கள் ஹிஜ்ரி 19-ம் வருடம், திரு மதீனாவில், தங்களின் 72-ம் வயதில் காலமானார்கள்.
கேள்வி: அன்னை ஸவ்தா (ரலி) அவர்களின் குண இயல்புகள், வணக்க வழிபாடுகள் யாவை?
பதில்: அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் நகைச்சுவையாகப் பேசக் வடியவர்களாகவும், மனத்துக்கு மகிழ்வை அளிக்கும் முறையில் பேசுபவர்களாகவும் இருந்தனர்.
ஒரு முறை, "சென்ற இரவு நான் தங்களுடன் தொழுது கொண்டி ருந்தேன் அல்லவா? அச்சமயம் தாங்கள் 'ருகூஃ'வில் குனிந்து கொண்டிருந்தீர்கள். நீண்ட நேரம் ஆகியும் தாங்கள் நிமிரவே இல்லை. அதனால் என் முதுகு எலும்பு எங்கே முறிந்து விடுமோ என்று எண்ணினேன். எனவே என்னுடைய மூக்கைப் பிடித்துக் கொண்டே ருகூஃவில் இருந்தேன்” என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் புன்முறுவல் பூத்தவர்களாக இருந்தனர்.
கேள்வி: அன்னை ஸவ்தா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மூலம் குழந்தைகள் உண்டா?
பதில்: இல்லை, எனினும், ஸவ்தா (ரலி) அவர்களின் முதல் கணவரான ஸக்ரான் (ரலி) அவர்கள் மூலம் ஓர் ஆண் குழந்தை இருந்தது. இவரின் பெயர் அப்துர் ரஹ்மான் என்பதாகும். இவர் ஈரானில் நடந்த 'ஜலூலா' என்னும் போரில் முஸ்லிம் வீரராய் கலந்து கொண்டு வீர கவர்க்கம் அடைந்தார்.
கேள்வி: ஸவ்தா (ரலி) அவர்களைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியது என்ன?
பதில்: "எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவளைப் போன்று நானும் இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஆனால் ஸவ்தா (ரலி) அவர்களின் பேரழகையும், நடத்தையையும், நற்குணங்களையும் கண்டபின், நானும் ஸவ்தாவைப் போல் இருக்க வேண்டும்! என்று ஆசைப்பட்டேன்" என்று கூறினார்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !