தமிழ் சொற்பொழிவுகள்
மரணம் பல விதம் விசாரணை நாள் பாவமன்னிப்பு

Monday 1 December 2014

இஸ்லாத்தில் பெண்களின் பங்கு

“உங்களால் இயன்றவரை பலத்தையும் திறமையையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 8:60)
 அறிவுக்கேற்ற மார்க்கமாம் நம் உயிரிலும் மேலான இஸ்லாம் இன்று உலகெல்லாம் வளர்ந்து ஓங்கி நிற்பதற்கு பெண்களின் பங்கும் மகத்தானது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அரவணைப்பும் பொருளாதார உதவியும்

 ஹிரா மலைக்குகையிலிருந்து வல்லோன் இறைவனிடமிருந்து இறைச் செய்தியைப் பெற்று நடுங்கிய வண்ணம் ‘ஸம்மிலூனீ’, ‘ஸம்மிலூனீ’ (என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்) என வேண்டி நின்ற நபி பெருமாநாருக்கு “பயப்படாதீர்! தைரியத்துடன் இருங்கள்! உங்களுக்கு எதுவும் நேர்ந்து விடாது. உங்களைப் படைத்த நாயன் உங்களை ஒரு போதும் கைவிட மாட்டான். நீங்களோ உண்மையாளர். உறவினரை ஆதரிப்பவர்! இன்னா செய்தாருக்கு இனியவை செய்பவர். வாய்மையும் ஈகையும் மிக்கவர்! அப்படிப்பட்ட உங்களுக்கு அல்லாஹ் ஒரு தீமையும் செய்ய மாட்டான். ஒரு மாபெரும் காரியத்தைச் சாதிப்பதற்காகவே உங்களை அந்த நாயன் தேர்ந்தெடுத்துள்ளான்”. என்று ஆறுதல் கூறித் தேற்றியவர் ஒரு பெண்மனி! அதுவும் அவரது அன்புத் துணைவியாரான கதீஜா அம்மையார். அது மட்டுமா? அரபு நாட்டில் தமது வாணிபத்தின் மூலம் திரட்டிய கோடிக்கணக்கான சொத்துக்களை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கி பெருமானாரின் முதுகெலும்பாக நின்று அரவணைத்து நிழலாக  நின்றவர் ஒரு பெண்மனி என நினைக்கும் போது நம் நெஞ்சமெல்லாம் நிறைகிறது.


 அன்று மட்டும் அவரது நெஞ்சுரம் மிக்க ஆறுதல் வார்த்தைகளும் பெருஞ்செல்வமும் இல்லையென்றால் பெருமானாரின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.

 உம்மு ஷரீக் அல் அன்ஸாரிய்யா! மிகப் பெரும் செல்வச் சீமாட்டியான இவர், இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அள்ளி அள்ளி வழங்கியவரில் குறிப்பிடத்தக்கவர். இவரது இல்லத்தை ஏழைகளும், ஆதரவற்றோரும், தேவையுடையோரும் மொய்த்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் இல்லம் விருந்தினருக்கும், பசித்திருப்போருககும் எப்போதும் திறந்தே இருக்கும்.

போர்க்களத்தில்



உஹதுப் போர்க்களத்திலே பெருமானாரின் தலையைக் குறிவைத்து எதிரிகளின் அம்புகளும் வாட்களும் வீசப்பட்ட வேளையில்  அரணாகக் காத்து நின்றவர்களில் முன்னனியில் நின்றவர் ஒரு பெண்! அவரே நுஸைபா எனும் உம்மு உமாரா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். பெருமானாரைக் காக்க உயிரையே துச்சமாக மதித்துப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர். அப்போது அவருக்கு வயது 43. இப்போரில் இவருக்கு 12 காயங்கள் ஏற்பட்டன. தமது மகனைக் காயப்படுத்தியவனை ஒரே பாய்ச்சலில் வீழ்த்தினார். தமது 52 வயதில் யமாமா போரில் கலந்து கொண்டார். இவரது வேண்டுதலை ஏற்று தம்முடன் சுவர்க்கத்திலிருப்பதற்கு நபியவர்கள் துஆ செய்தார்கள்.

அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி உம்மு ஃபழ்லு ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், முஸ்லிமான தமது அடிமையைக் கொடுமைப்படுத்தியதற்காக அபூலஹபின் தலையில் கட்டையாள் அடித்த மரண அடி அவனது மரணத்துக்கே காரணமாயிற்று. இந்த மாபெரும் வீராங்கணையின் வீரத்தையும் தீரத்தையும் மறக்க முடியுமா?

பெருமானாரின் மாமியாரான அன்னை ஸபிய்யா ரழியல்லாஹு அன்ஹா தமது 60வது வயதில் அகழ்போரில் கலந்து கொண்டார். அப்போது பெண்கள் இருந்த பாதுகாப்பான இடத்திற்கு உளவு பார்க்க வந்த எதிரிப் படைத் தளபதியின் தலையை வெட்டி எதிரிகளின் கண்முன்னே தூக்கி வீசிய அபாரச் செயல் எதிரிகளைக் கதிகலங்கச் செய்து ஓடவைத்தது. ஒரு முஷ்ரிக்கை (இணைவைத்தவனை) முதன் முதலாகக் கொன்ற பெருமையைப் பெற்ற இந்தப் பெண்மனியின் துணிவு மிக்க செயலை மறக்கமுடியுமா?



உம்மு ஸுலைம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் உஹதுப் போர்க்களத்தில் பங்கு கொண்ட பதினான்கு பெண்களில் ஒருவர். கர்ப்பிணியாக இருந்தும் ஹுனைன் போரிலே பங்கேற்ற போது தமது இடுப்பிலே ஒரு கத்தியை வைத்திருந்தார்கள். இதற்கான காரணத்தை நபிகளார் கேட்ட போது “இணை வைக்கும் எவனாவது என்னை நெருங்கினால் அவனது வயிற்றைக் கிழிப்பதற்காகத்தான்” என்றார்கள். இவர்களின் தீரத்தை வரலாறு மறக்க முடியுமா?

அரேபியர்களுக்கும் ரோமர்களுக்கும் இடையில் நடந்த போரில் தள்பதி காலித் பின் வலீதின் தலைமையில் அவருக்கே தெரியாது கறுப்பு உடை தரித்து பச்சைத் தலைப்பாகை அணிந்து வாலும் வேலும் ஏந்தி எதிரிப் படையிலே புயலெனப் பாய்ந்து எட்திரிகளை வெட்டிச் சாய்த்த வண்ணமிருந்தார் ஒரு போராளி. இவர் ஒரு பெண் என்பது போரின் வெற்றிக்குப் பிற‌கே தெரிய வந்தது. இவரது அபார ஆற்றலை வரலாறு மறக்க முடியுமா?

பெண் கவிஞர் கன்ஸா பிந்த் அம்ர் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது 4 ஆண்மக்களுடன் காதிஸிய்யாப் போரிலே கலந்து கொண்டார்கள். இவரது பொறிபரக்ககும் வீர உரைகளைக் கேட்ட  இவரின் 4 ஆண்மக்களும் களத்திலே குதித்து வீரப் போராடி ஷஹீதானார்கள் என்ற செய்தியை அறிந்ததும் “அல்ஹம்துலில்லாஹ்! என் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது. யா அல்லாஹ்! உனது சுவர்க்கத்திலே எங்களை ஒன்று சேர்ப்பாயாக!” என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து துஆச் செய்தது நமது இதயங்களை எல்லாம் உருகச் செய்கிறது.
அஃப்ரா பிந்த் உபைத் அந்நஜ்ஜாரிய்யா ரழியல்லாஹு அன்ஹா தமது ஏழு மக்களுடன் பத்ர் களத்திலே குதித்து மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பத்ர் வெற்றிக்கு உறுதுணையாக நின்றது வரலாற்றிலே அழியாத இயடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இவர்களின் பங்களிப்புக்களை நாம் மறக்க முடியுமா?

போராட இயலாதவர்கள் போர் வீரர்களுக்கு கட்டுப் போட்டு மருத்துவ உதவி செய்தல், வீரப் பாடல்கள் பாடி போர் வீரர்களை உற்சாகப்படுத்துதல் போன்ற அரும்பணிகளையும் செய்து வந்தார்கள்.

அன்னை உம்மு ஸலமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத் தடுத்துத் தமது பிஞ்சுக் குழந்தையை குறைஷிகளும், உறவினர்களும் பறித்து வைத்துக் கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச் செய்கிறது.

தனது கணவருடன் பெருமானாரின் பாசறைக்குப் போக முடியவில்லையே! தம்மை அழைத்துச் செல்ல யாரேனும் முன் வர மாட்டார்களா? என ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்து ‘தன்யீம்’ என்ற இடத்திலே காலை முதல் மாலை வரை காத்துக் காத்து கிடப்பார்கள் அன்னையவர்கள். எத்தனை நாட்கள் தெரியுமா? ஒரு நாளல்ல! ஒரு வாரமல்ல! ஒரு மாதமல்ல! ஓர் ஆண்டு முழுவதும் இப்படியே வந்து போவார்கள். இருதியில் அவர்மீது இரக்கப்பட்ட அவரது உறவினர்கள் அவரின் பிஞ்சுக் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து மதினாவுக்கு அனுபி வைத்தார்கள். இது போன்ற வரலாற்றைக் கண்டிருக்கிறோமா?



உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி உம்மு குல்தூம் பிந்த் உக்பா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு தன்னந்தனியாக கால்நடையாக ஹிஜ்ரத் சென்றார்கள். அவ்வாறே உம்மு ஹக்கீம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் தன்னந்தனியாக மதினாவுக்கு ஹிஜ்ரத் சென்ற தீரமிக்க வீர வரலாற்றுப் பக்கங்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

அன்னை அஸ்மா பிந்த் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் போது 400 கிலோமீட்டர் தொலைதூரமுள்ள மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்றது நம்மையெல்லாம் மயிக்கூச்செறியச் செய்யவில்லையா?
அதைவிடவும் ஒருபடி மேலே சென்றவர் அன்னை அஸ்மா பிந்த் உமைஸ் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பிரசவம் ஒரு பெண்ணுக்கு உயிர்போகும் வலி என்பார்கள். தமக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் ஏற்படும் என்பது தெரிந்தே உயிரினும் இனிய நபி பெருமானாரிடம் தமது அன்புக் கணவருடனும் 400 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மக்காவிரற்குப் புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதும், சில நாட்களில் துல்ஹுலைபாவில் பிரசவம் நடந்ததும், அடுத்த சில நாட்களில் பிள்ளைப் பெற்ற உடம்புடன் புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்றதும் வரலாற்றில் காண முடியாத அறியாத நிகழ்ச்சியாகும்.
இவைப்போன்ற வீரதீர வரலாறுகளை உலகம் வேறு எங்காவது கண்டிருக்குமா? கேட்டிருக்குமா? இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான உத்தமிகள் இஸ்லாத்திற்கு தங்களின் பங்களிப்புகளை வழங்கியச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் மிளிர்வதைப் பார்க்கலாம்.

பெண்களிலே செயலாற்றல் மிக்க நாவலர் அஸ்மா பிந்த் யஸீத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவும் ஆற்றலும், வீரமும், விவேகமும் மிக்கவர். பெனண்களின் நாவலர் (கத்தீப்பத்துன் நிஸா) எனப் போற்றப்படுஅவர். ஒருதடவை இவரது துணிவு மிக்க உரையைக் கேட்டு பெருமானாரே அசந்து விட்டார்கள். யர்மூக் போரிலே பங்கேற்று ஒன்பது ரோமர்களைக் கொன்றொழித்ததையும் மக்கா வெற்றியில் பங்கேற்று சாதனைப் படைத்ததையும் வரலாறு மறக்கமுடியுமா?

இலக்கியம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திரு உருவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல் இலக்கிய நயத்தோடு பெருமானார் பற்றிய வர்ணனையைக் கூறும் உம்மு ஃபத் ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் இலக்கியச் சேவையை மறக்க முடியுமா?

கல்வி



கல்விக்கு அரும்பணியாற்றிய அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை, சீரிய ஆலோசனைகள் வழங்கிய  அன்னை உம்மு ஸலமாவின் அறிவுக் கூர்மையை, குர்ஆனைப் போதனை செய்து இமாமத்தும் நடத்தி வந்த உம்மு வரகாவின் ஆர்வத்தை, ஹதீஸ் கலையில் சிறந்து விளங்கிய ஸைனப் பிந்த் அப்ஸல்மாவின் ஹதீஸ் புலமையை, மதப் பிரச்சாரமும், போதனையும் செய்த பாத்திமா பிந்த் கைஸ் ரழியல்லாஹு அன்ஹா, ஷிஃபா பிந்த் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹா, உம்மு ஷரீக் அல்குரஷிய்யா ரழியல்லாஹு அன்ஹா ஆகியோரின் அறிவுப் பணிகளையும் மறக்க முடியுமா?
அடுத்து பாத்திமா பிந்த் அஸத், உம்மு ஃபழ்லு, உம்மு ரூமான், ஐமன் ரழியல்லாஹு அன்ஹுன்ன போன்ற தன்னலமற்றவர்களின் சமுதாயச் செவைகளை நாம் மறக்க முடியுமா?

ஸைனப் பிந்த் அஸத், பாத்திமா பிந்த் கைஸ் ரழியல்லாஹு அன்ஹுமா போன்ற பெண் மேதைகள் அரசியலுக்கும், ஆட்சி அதிகாரங்களுக்கும் வழங்கி வந்த அரிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் நாம் மறந்து விட முடியுமா?
இவை போன்ற எந்தத் தியாகமும் சேவையும் பங்களிப்பும் செய்யாது உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே! நாம் இறைவனிடம் என்ன பதில் சொல்வது? அப்படியானால், நாம் போலியான நரகத்திற்குரிய ஒரு வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இரத்தம் சிந்த வேண்டியதில்லை; உடலை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை. நம்மால் இயன்றவரை  சிறு சிறு பங்களிப்புகள், சேவைகள், தொண்டுகள் செய்யலாமல்லவா?
சிறுசிறு தியாகங்கள் செய்து மார்க்கத்தைப் படிப்பது, பிறருக்குச் சத்தியத்தைப் போதிப்பது, அதற்காக உழைப்பது, நாயகத் தோழியர் தியாகம் செய்து இரத்தம் சிந்திய சம்பவங்களைப் படிப்பது, முடியுமானால் அவ்விடங்களுக்குச் சென்று பார்வையிடுவது, அதற்காக சிறிது நேரம் செலவு செய்வது, வீண் கேளிக்கைகளை விடுவது, நேரங்களைப் பயனுள்ளதாகக் கழிப்பது, குர்ஆன் ஓதுவது, நேரம் தவறாது தொழுவது, குழந்தைகளுக்கு இஸ்லாமிய ஒழுக்கங்களைப் போதிப்பது, நமது தோழியர், உறவினர்களை மார்க்கம் பயில அழைத்து வருவது, தேவையுடையோருக்கும் ஆதரவற்றோருக்கும் உதவுவது, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது, இஸ்லாமிய ஒழுக்கங்கள் – மாண்புகளைப் பேணுவது, குர்ஆன் – சுன்னா வழியில் தவறாது வாழ்வது இவற்றைத்தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

நாம் இஸ்லாத்திற்காக இது கூடச் செய்ய வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ் இவை போன்ற சிறுசிறு பணிகளையாவது செய்ய நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்!
நன்றி.. ஆபிதா பானு
iqrah .net
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
சிந்தனைச் சாரல்  ..
இஸ்லாத்தில் பெண்களின் பங்கு  

1 comment:

  1. அருமையான பதிவு நன்றி..

    ReplyDelete

Best comment is welcomed !