உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -
“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?
“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள்
நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி
வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்
:அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.


உறவை முறித்தால்?
உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன்
நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக்
கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை
முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ
இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள்
இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார்.
அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர்
அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா
(ரலி), ஆதாரம் : புகாரி.
அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம்
வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது.
அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை
கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை
(வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை
எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம்
நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா?
சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய
முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இந்தக்
குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது
மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு
கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?
நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று
கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று
பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன்
குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி
அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன்.
‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள்
அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று
தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று
கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்)
விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல்
இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி.

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில்
அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி
பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் :ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்), ஆதாரம் :
புகாரி.

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -
(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை
காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -
“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல்
அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை
வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம்
: புகாரி.

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!
‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின்
மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன்
இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை
வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று
பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம்: புகாரி.

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!
‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை
வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும்
அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்.
அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக
இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி),
ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை
வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும்
நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப்
பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

மய்யித்திற்கு துஆச் செய்வது, அதை பின் தொடர்வது:
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஒருவர் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டால் அவருக்கு ஒரு 'கீராத்'
நன்மை உண்டு. ஒருவர் அதை அடக்கம் செய்யும் வரை கலந்து கொண்டால் அவருக்கு
''இரண்டு கீராத்'' உண்டு என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இரண்டு கீராத்
என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பெரும் இரண்டு மலைகள்
போன்றது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து
கொண்டு, அதற்காக தொழுது, அதை அடக்கம் செய்யப்படும் வரை ஒருவன் இருந்தால்,
அவன் இரண்டு ''கீராத்'' நன்மைகளை கூலியாகப் பெற்று திரும்புகிறான். ஒரு
கீராத், உஹது மலை போலாகும். ஒருவன் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு,
அடக்கம் செய்யப்படும் முன் திரும்பிவிட்டால், அவன் ஒரு ''கீராத்''
நன்மையுடன் திரும்புகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி)(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறந்தவருக்காக நீங்கள் தொழுதால், அவருக்காக துஆவை நீங்கள்
மனத்தூய்மையுடன் செய்யுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஜனாஸாவை (அடக்கம் செய்ய) தீவிரமாக்குங்கள். அது நல்லதாக இருந்தால், அதை
நன்மையின் பக்கம் முற்படுத்தி வைத்தவர்களாவீர்கள். அது தீமையானதாக
இருந்தால் உங்களின் பிடரிகளை விட்டும் (உங்கள் பொறுப்பை) அந்த தீமையை
இறக்கி வைத்தவர்களாவீர்கள்'' என நபி(ஸல்) கூறினாhர்கள். (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''ஜனாஸா (அடக்கம் செய்திட) தயார் செய்யப்பட்டு, அதை ஆண்கள் தங்களின்
கழுத்துகளில் சுமந்து சென்றால், அந்த ஜனாஸா நல்லதாக இருந்தால், ''என்னை
சீக்கிரம் கொண்டு செல்லுங்கள்.'' என்று அது கூறும். அது சரியில்லாததாக
இருந்தால், தன்னைச் சேர்ந்தோரிடம் ''எனக்கு வந்த நாசமே! என்னை எங்கே
கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கேட்கும். அதன் சப்தத்தை மனிதன் அல்லாத
அனைத்தும் கேட்கும். மனிதன் கேட்டால் அதிர்ச்சியாகி விடுவான் என்று
நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்)
Thanks..unmai4u.blogspot.com
Allah bless him!
Hathees.

Comments