இது என்ன மாதம் ....என்று கேட்டால் ..!

இது என்ன மாதம் ....என்று கேட்டால் ..!

அருமை தங்கை அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]
'உன்னை ஒன்று கேட்பேன் சரியா ! இது என்ன மாதம் ?
'என்னன்னா ! இது தெரியாதா? பிப்ரவரி சரியா! என்பாய். நான் கேட்டது ஆங்கில மாதத்தையோ , தமிழ் மாதத்தின் பெயரையோ அல்ல. நமக்கென இஸ்லாம் வகுத்து  வைத்துள்ள மாதத்தின் பெயரை கேட்டேன்.
'ம் ..அதுவா மௌளது பிறை -சபர் கழிவு , பத்து நோன்பு ,அம்மா பிறை, -புது ரஜ், பழைய ரஜ் - மதார்ஷா பிறை, முஹைதீன் ஆண்டவர் பிறை- காதர் அவுலியா பிறை , ம் .. அப்புறம் ...'
'ஸ்டாப் ஸ்டாப் ... மாவட்டத்திற்கு பெயரிட்டதுபோல் , நீ நம் மாதங்களுக்கு ஒவ்வொரு காரணப்பெயர் சூட்டி விடுவாய் போலுள்ளதே ! இப்படித்தான் பல இடங்களில் , பல்வேறு வகையான பெயர்கள் சொல்லப்பட்டு வருகிறது.


தங்கையே! ஆங்கிலத்திலும், தமிழிலும் மாதங்களுக்குப் பெயர் வகுத்துள்ளது போன்று, இஸ்லாத்திலும் மாதங்களுக்கு அழகிய பெயரிடப்பட்டுள்ளன . அதை விட்டுவிட்டு நமது இஷட்டத்திற்கு ஒவ்வொரு மாதத்தையும் அழைக்கிறோம் . காரணம் அதைப்பற்றி விளங்கிக் கொள்வதில்லை  . ஏதேனும் திருமணம் இருந்தால் மட்டுமே நமது மாதத்தின் பெயர் - பிறை தேடி அலைகிறோம். மாதம் பிறை நினைவுப்படுத்தச் செய்வதே  இது போன்ற நிகழ்வுகளால் மட்டுமே.

அழைப்பிதழில் 'அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ' எனபதை பார்த்துப் போடு, இதில் கவனம் வேண்டும். இதை சரியாகப் போட்டால் 'இறைவனின் அருள் உங்கள் மீது உண்டாவதாக' என பொருள்படும் . இஸ்லாத்தின் அழகிய முகமன் ஆகும் . இதனைக் கூட சரியாக சொல்ல முடிவதில்லை . ஸலாம் சொல்லக் கூட தயங்குகிறோம் . இறைவனால் நமக்குத் தரப்பட்ட இந்த இனிய  சொல்லைக் கூறும் பொழுதே பகைமை மறந்து , நெஞ்சமெல்லாம் நேசம் நிறைந்துவிடும் . ஸலாம் சொல்லி, முசாபாஹா செய்தால் கைகள் பிரியும் முன்பாகவே , பாவங்கள் நீங்கிவிடும் . ஸலாத்தினைப் பரப்புங்கள் என்பது நபி [ஸல்] அவர்களது அருள் மொழியன்றோ !

முந்தி ஸலாம் சொல்பவர்களுக்கு அதிக நன்மை என்பதை பெரியோர்கள் மூலம் உணர்ந்திருப்பாய் . சரி இனி நான் நம்ம விஷயத்திற்கு வருகிறேன் . ஆங்கில ஆண்டின் மாதங்கள் பலமுறை மாற்றப்பட்டு  அதன் பின்னர் ஜனவரியிலிருந்து துவங்கப்பட்டுள்ளது . தமிழில்  மாதங்கள் ஆண்டின் ஆரம்பமாக சித்திரை இருந்தது. பின்னர் தை ஆனது. அதன் பின்னர் மீண்டும் சித்திரை ஆகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப  மாதங்களின் துவக்கம் மாறும். என்றும் மாறாமல் இருக்கும் இஸ்லாமிய மாதங்களின் பெயரினை அதன் அர்த்தங்களுடன் தருகிறேன்..

1.முஹர்ரம் - விலக்கப்பட்ட காலம்  [ஹராமை விட்டு]
2.சபர் - இலையுதிர் காலம்
3.ரபி உல் அவ்வல்- புது வசந்தம் [நபி [ஸல்] அவர்களின் உதயமே புது வசந்தம்தான் .
4.ரபி உல் ஆஹிர் - வசந்தத்தின் இறுதிகாலம்  .
5.ஜமாத்துல்   அவ்வல் - பனி உறையும் காலம்.
6.ஜமாத்துல் ஆஹிர் - பனி உறையும் இறுதி காலம் .
7.ரஜப் - மரியாதைக்குரிய காலம்.
8.ஷஃபான் -பங்கிடுதல் .
9.ரமலான் -[தீமைகளை ] சுடெரித்தல்.
10.ஷவ்வால் -சிதறிவிடுதல் [பொருள் தேடுவதற்காக]
11.துல்கஃதா -யுத்தம் எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பது.
12.துல்ஹஜ் -வருட முடிவும் ஹஜ்ஜூம் இம்மாதத்தில் வருவதால் துல்ஹஜ் என்று பெயர் வழங்கப்பட்டது .
நன்றி நர்கிஸ்
நன்றி ஷேக் அப்துல்லாஹ்

Comments