மகிழ்ச்சியான வாழ்க்கை அன்பான குடும்பம்

 


அன்புதான் மகிழ்ச்சிகள் நிறைந்த குடும்பத்தின் அஸ்த்திவாரம்


பயிற்சியாளரின் சாட்டைக்கு பயந்த சிங்கமும் புலியும் ஒரு நாள் அவரின் கையிலிருந்து சாட்டை நழுவி விட்டால் அவனது கதையை முடித்து விடுகின்றன. ஆனால், வளர்ப்பவரின் அன்பினால் அடக்கப்பட்ட மிருகங்களோ ஒருபோதும் அவரை காயப்படுத்துவதில்லை. அவரோ எந்த சாட்டையுமின்றி அதனுடன் இருக்கிறார்.


அன்பினால் பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்கள் தங்கள் வளர்ப்பாளர் மீது உயிரையே விடுகின்றன. அவரை ஆரத்தழுவி தமது பாசத்தை பொழிகின்றன. அவை அவர்களை கொஞ்சுகின்றன. அவர்கள் அவற்றை கொஞ்ச வேண்டுமென்று அடம் பிடிக்கின்றன. இதில் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, என எந்த மிருகமும் விதிவிலக்கு இல்லை.


அன்பு என்பது அத்தகைய அபூர்வ சக்தியாகும்.


அன்பு என்பது ஓர் இனிப்பாகும். எத்தகைய கசப்பான கட்டளையையும் அவற்றில் அன்பை கலந்துவிட்டால் அவற்றை இனிப்பாக்கி விடலாம். எத்தனையோ இனிப்பான கட்டளைகளில் அன்பில்லாததால் அவை கசப்பாகிவிடுகின்றன.


அன்பு என்பது ஒரு பசையை போன்றது. அன்பு என்பது காந்தத்தை போன்றது.


அன்புக்கு அளவுமில்லை, எல்லையுமில்லை. அன்புக்கு விலை போட முடியாது. அன்புக்கு விலை கொடுக்கவும் முடியாது.


உண்மையான அன்பு உண்மையான உயிரிலிருந்து வருகிறது. உண்மையான அன்பிற்கு மதிப்பு உயிர்தான். வேறொன்றும் அன்பிற்கு சமமாக முடியாது.


அன்பு உள்ளத்திற்கு குளுமையை தருகிறது. வெறுப்பு மனதில் புழுக்கத்தை ஏற்படுத்துகிறது.


அன்பு மனதிற்கு அமைதியை தருகிறது. பகைமை உள்ளத்தில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.


அன்பு ஓர் ஆரோக்கியமாகும். வெறுப்பு ஒரு நோயாகும்.


குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரமே அன்பும் பாசமும்தான்.


அன்பு இருந்தால்தான் நிம்மதியும் அமைதியும் அக்கறையும் இருக்கும்.


வீட்டுக்கு சுவரும் முகடும் பாதுகாப்பாகும். அவை இரண்டும் உறுதியாக இருக்க வேண்டும். அப்படித்தான் அன்பும் பாசமும் குடும்பத்திற்கு சுவரைப்போலவும் முகட்டைப் போலவுமாகும்.


குடும்ப வாழ்கையின் இலக்கணத்தையும் இல்லற வாழ்க்கையின் ரகசியத்தையும் கணவன் மனைவி உறவையும் இப்படித்தான் அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணிக்கிறான்:


இன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்களுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.


1. அல்குர்ஆன் 30:21.வாழ்க்கை என்பது ஒரு இருள் என்றால் அன்பு என்பது அதன் வெளிச்சமாகும். வாழ்க்கை என்பது ஒரு பாதை என்றால் அன்பு என்பது அதன் வழிகாட்டியாகும். வாழ்வதற்கு உயிர் அவசியம் என்றால் அந்த உயிருக்கு அன்பு அவசியம். ஆகவேதான் அன்பு கிடைக்காதவர்கள் உயிர் வாழவே ஆசைப்படுவதில்லை. அன்பை பறிகொடுத்தவர்கள் அல்லது அதை தவறவிட்டவர்கள் அல்லது அதில் ஏமாற்ற மடைந்தவர்கள் அந்த அன்பருக்கு பின்னால் வாழ்க்கையே கசந்து விட்டது என்று கூறுகிறார்கள்.


அல்லாஹ்வின் தூதரும் நமது மார்க்க முன்னோடியுமான நமது உயிரினும் மேலான நபி அவர்களிடம் ஒரு தோழர் கேட்கிறார், உங்களுக்கு மிக பிரியமானவர், மிக அன்பிற்குரியவர் யார் என்று. உடனே அந்த நபி அவர்கள், என் மனைவி ஆயிஷாதான் எனக்கு மிக பிரியமானவர், மிக அன்பிற்குரியவர் என்று பதில் அளிக்கிறார்கள்.?


பாருங்கள்! ஒரு இறைத்தூதர் தன் மனைவியின் மீது வைத்திருந்த அன்பையும் பிரியத்தையும்.


நீங்கள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் நேசிப்பது உண்மை என்றால் உங்கள் மனைவி மக்களை நீங்கள் நேசித்தாக வேண்டும். அவர்கள் மீது அன்பும் பாசமும் வைத்தாக வேண்டும். அப்போதுதான் நாம் இந்த உலக வாழ்க்கையை சுவைக்க முடியும், ஜீரணிக்க முடியும்.


உலகில் உள்ள மிருகங்களை, பறவைகளை, இன்னும் பல உயிரினங்களை நன்கு பாருங்கள்! அவை எப்படி ஜோடி ஜோடியாக குடும்பம் குடும்பமாக வாழ்கின்றன! ஒவ்வொரு மிருகமும் தன் ஜோடியை கொஞ்சியும் பாசத்தை பகிர்ந்தும் மகிழ்கிறது. காதல் பறவை என்று சொல்லப்படும் ஓர் பறவை இனத்தை பார்த்தாவது நாம் அன்பையும் பாசத்தையும் படிக்க வேண்டாமா?


2. அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஆஸ் . நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 4358.மனைவியை முழுமையாக நேசிக்காத ஓர் ஆணின் ஆண்மை குறைவுடையது என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.


அப்படித்தான் தன் கணவனை நேசிக்காத. அவன் மீது அன்பையும் பாசத்தையும் அடை மழையாக பொழியாத பெண்ணின் பெண்மை குறைபாடுடையது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.


உடலுக்கு பல விட்டமின்கள் அவசியமாக இருப்பது போல வாழ்க்கைக்கு கண்டிப்பாக அன்பு என்ற முக்கியமான விட்டமின் அவசியம்.


வாகனங்கள் இயங்குவதற்கு ஒரு எரி சக்தி அவசியம். அப்படித்தான் நமது குடும்ப வாழ்க்கை சீராக இயங்குவதற்கு நமக்கு அன்பு என்ற சக்தி தேவை.


அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. அன்பை கடைகளில் காடுகளில் தேட முடியாது. அன்பை, அன்பைக் கொண்டுதான் பெற முடியும். அன்பு, உள்ளங்களின் ஒற்றுமையினால் இறைவன் ஏற்படுத்துகிற அற்புதமாகும்.


அந்த மகா கருணையாளனிடம் நாம் அவனது அன்பை வேண்ட வேண்டும். அவனது நல்லடியார்களின் அன்பை வேண்ட வேண்டும். அப்படித்தான் கணவன் மனைவியின் அன்பையும் மனைவி கணவனின் அன்பையும் பெற்றோர் பிள்ளைகளின் அன்பையும் பிள்ளைகள் பெற்றோரின் அன்பையும் வேண்ட வேண்டும்.


அல்குர்ஆன் தனக்கே உரிய இலக்கிய நயத்துடன் நமக்கு இதை இப்படி கற்பிக்கிறது.


இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!"3


ஆக, உங்கள் ஜோடியின் மீதும், பிள்ளைகள் மீதும். குடும்பத்தார் மீதும் அன்பு வையுங்கள். உள்ளங்களை அன்பினால் நிரப்புங்கள்.


விசாலமான உள்ளம் அன்பு நிறைந்த உள்ளமே!


அருள் நிறைந்த உள்ளம், அன்பு ஊற்றாய் ஊறுகிற உள்ளம்தான்.


அன்பு மிகைத்த உள்ளம்தான் அமைதியும் நிம்மதியும் குடியிருக்கும் உள்ளம்.


நமது நபி அவர்கள் அன்பைக் கொண்டு அரபுலகத்தையே தம் பக்கம் ஈர்த்தார்கள். வெறுத்தவர்கள் மீது கருணை காட்டினார்கள். அந்த நபி அவர்களின் அன்பினால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொருவரும் இந்த மார்க்கத்திற்காக உயிரையே தியாகம் செய்தார்கள்.


அன்று நபி அவர்கள் மக்கள் மீது காட்டிய அன்பு இன்றும் உயிரோடு இருந்து பல நூறு கோடி முஸ்லிம்களை அவர்கள் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறது.


இன்றும் அவர்களை போற்றி புகழ்ந்து பேசுகிறோம். அவர்களின் தூய தியாக வரலாறை பற்றி பேசும்போது கண்கள் நம்மையும் அறியாமல் கண்ணீரை கொட்டுகின்றன.


நமது உயிர்கள் அந்த தூதர் மீது அர்ப்பணமாகட்டுமாக!


அந்த தூதரின் போதனையே அன்புதான். குடும்ப வாழ்க்கைக்கு துணை ஒன்றைத் தேடினேன். அவளை நான் மணம் முடிக்க முடிவு செய்துள்ளேன் என்று ஒரு தோழர் அந்த நபியிடம் கூறும்போது உடனே அந்த தோழருக்கு நபி அவர்கள் கூறிய ஆலோசனை இதுதான். அதாவது, நீ அவளை மணம் முடிக்கும் முன்பாக ஒரு முறை பார்த்துக்கொள்! அது உங்கள் இருவருக்கும் இடையில் அன்பையும் இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த மிக தோதுவாக இருக்கும். அந்த தோழரும் அப்படியே செய்தார். தன் திருமணம் முடிந்து அந்த வாழ்க்கை மிக சிறப்பாக இருந்தது என்று அவர் தன் அனுபவத்தை பகிர்கிறார்."


மனைவி மக்கள் என்பவர்கள் நீங்கள் உருவாக்கிய ஒரு அழகிய பூங்காவாகும். அதை ஏன் வெறுப்பு என்ற நெருப்பை கொண்டு பொசுக்க முயற்சிக்கிறீர்கள். அன்பு என்ற நீர் பாய்ச்சி மேலும் மேலும் அதை செழிப்படைய செய்யுங்கள்!


யாரிடம் குறை இல்லை, அல்லாஹ் ஒருவனைத் தவிர. குறைகளை பார்க்காதீர்கள். குற்றங்களைத் தேடாதீர்கள். தவறுகளை மனதில் பதிய வைத்துக் கொள்ளாதீர்கள். காயங்களை மருந்திட்டு ஆற்றிவிடுங்கள். நிறைகளைப் பாருங்கள்! நல்லதைத் தேடுங்கள்! நல்லதை நினைவில் வையுங்கள்! உங்கள் ஜோடிக்கு நன்மையை செய்யுங்கள்! ஒரு சில சமயம் ஜோடியில் ஒருவர் வெறுப்பை வீசினாலும் நீங்கள் அன்பை காட்டுங்கள். அவர் உங்களுக்கு அடிமையாகி விடுவார். உங்கள் மீது தன் உயிரையே கொடுத்து விடுவார்.


இதோ அல்லாஹ் நமக்கு அப்படித்தானே வழி காட்டுகிறான்.


நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார். இந்த குணத்)தை பொறுமையாளர்கள் தவிர கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும், பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர இந்த குணத்)தை கொடுக்கப்பட மாட்டார்கள். நிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி)


4. அறிவிப்பாளர்: முகீரா இப்னு ஷுஃபா ஆ. நூல்: ஸுனனுத் திர்மிதி எண்: 1087.உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன். நன்கறிந்தவன் ஆவான்.


இந்த அறிவுரையை குடும்ப வாழ்க்கையில் முதலில் நாம் பின்பற்றவில்லை என்றால் நம்மை விட துர்பாக்கியவான்கள் யார் இருக்க முடியும்? அல்லாஹ் பாதுகாப்பானாக!


அன்பு உருவாகுவதற்கும் அன்பு நிலைத்திருப்பதற்கும் அன்பு பரவுவதற்கும் அன்பு நீடித்திருப்பதற்கும் அன்பை அதிகப்படுத்துவதற்கும் ஆயிரம் காரணங்களைத் தேடுங்கள்! வெறுப்புக்கு ஒரு காரணத்தை கூட தேடிவிடாதீர்கள்.


அல்லாஹ்வே உனது அன்பையும் நேசத்தையும் எங்களுக்கு கொடு! உன் தூதரின் அன்பையும் நேசத்தையும் எங்களுக்கு கொடு! எங்கள் ஜோடிகளின், பிள்ளைகளின் அன்பையும் பாசத்தையும் எங்களுக்கு கொடு! எங்கள் உள்ளங்களை அன்பினால் நிரப்பு! வெறுப்பையும் மன கசப்புகளையும் எங்கள் இதயங்களில் இருந்து முற்றிலுமாக அகற்றி விடு! இந்த உலக வாழ்க்கையிலும் மறு உலக வாழ்க்கையிலும் எங்களுக்கு அழகியதை தா! நரக நெருப்பை விட்டு எங்களை பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நீ நன்கு செவியுறுபவன், அனைத்தையும் நன்கறிந்தவன்.


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!"

ஆமீன்.

(அல்குர்ஆன் )



Comments