கோபம் தவிர்ப்போம்!

 


மகிழ்ச்சியான வாழ்க்கை அன்பான குடும்பம் தொடர்ச்சி ...

ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு அழகான கட்டுரை ...


கோபம் தவிர்ப்போம்!


அன்பான வாழ்க்கைக்கு அடித்தளம் பரஸ்பர புரிந்துணர்வும், பொறுமையும், சகிப்பும், மன்னித்தலும் ஆகும்.


புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகிப்பு, மன்னித்தல் இந்த பண்புகள் குடும்ப வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.


மனிதன் என்றால் அவனிடத்தில் சில தவறுகள் இருக்கலாம். அவ்வப்போது சில மிஸ்டேக்ஸ் அவனிடமிருந்து நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகவே, கணவனும் சரி, மனைவியும் சரி, ஒருவர் மற்றவரை மன்னிப்பவராக இருக்க வேண்டும். அவர் மீது கோபப்படக் கூடாது, எரிச்சல் படக் கூடாது. ஆவேசப்படக் கூடாது. ஆத்திரப்படக் கூடாது. அமைதிகாக்க வேண்டும், நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.


கோபம் என்பது ஒரு விஷமாகும். விஷத்தில் கொஞ்சம். அதிகம் என்பது இல்லை.


ஒரு மனிதர் பல முறை எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று நபி அவர்களிடம் கேட்டபோது, "கோபப்படாதே!" என்றுதான் அவருக்கு நபியவர்கள் உபதேசம் செய்தார்கள்.


அதுபோன்று, முஃமின்கள் கோபப்பட்டால் உடனே மன்னித்து விடுவார்கள் என்று குர்ஆன் போதிக்கிறது. 25 26


25. அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா நூல்: ஸஹீஹுல் புகாரி எண்: 6116.

அல்குரான் 

26. ஆம் 42: 37.




இன்னும், முஃமின்கள் உடைய அழகிய பண்புகளில் ஒன்று அவர்கள் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.27


கோபம் சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், எதற்கெடுத்தாலும் கோபப்படுவது. அற்ப காரணங்களுக்காக கோபப்படுவது. அடுத்தவர் தெரியாமல், அறியாமல், புரியாமல் செய்த தவறுகளுக்காக கோபப்படுவது என்பது கூடாத ஒன்றாகும்.


கோபம் அல்லாஹ்விற்காக மட்டும் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் சட்ட வரம்புகள் மீறப்படும்போது மட்டும் கோபப்பட வேண்டும்.


ஒருவர் கோபப்படும்போது அடுத்தவர் உடனே அமைதியாகிவிட வேண்டும். அவரும் பதிலுக்கு கோபப்படக் கூடாது. தவறு செய்தவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். கோபப்பட்டவர் உடனே மன்னித்து விட வேண்டும். கோபத்தை அதிகப்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் கோபத்தில் இருக்கக் கூடாது.


காலையின் கோபம் மாலை வரை நீடிக்கக் கூடாது. மாலையின் கோபம் காலை வரை நீடிக்கக் கூடாது.


ஒருவர் மற்றவரை கோபப்படுத்தும்படியான சொல்லை பேசக் கூடாது. கோபமூட்டும்படியான செயலை செய்யக் கூடாது.


தனது மனைவிக்கு கோபமூட்டும் செயலை கணவன் தவிர்க்க வேண்டும். கணவனுக்கு கோபமூட்டக்கூடிய செயலை மனைவி தவிர்க்க வேண்டும்.


ஒருவரை மற்றவர் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, சந்தோஷமாக வைக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர. எப்போதும் பதட்டமாக, கோபமாக வைக்க முயற்சிக்க கூடாது.


ஒருவருக்கு பிடிக்காத சொல்லை, பிடிக்காத செயலை மற்றவர்

அல்குரான் 

27.  3: 134.



அறவே செய்யக் கூடாது. அப்படியே செய்துவிட்டால் உடனடியாக, 'சாரி' சொல்லி இருவரும் பழமாகி விட வேண்டும். காயாகவே நீண்ட நேரம் இருக்கக் கூடாது.


ஒன்று மிக முக்கியான செய்தியாகும். அதாவது, ஒவ்வொருவரும் தனது விருப்பு. வெறுப்புக்கு மார்க்கத்தை அளவுகோளாக வைக்க வேண்டும்.


அதுபோன்று, ஒருவர் மற்றவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடக் கூடாது. எனக்கு பிடித்த உணவையே நீயும் சாப்பிட வேண்டும். எனக்கு பிடித்த நிற ஆடையையே நீ அணிய வேண்டும். இப்படியாக ஒருவர் மற்றவரை நிர்ப்பந்திக்கக் கூடாது.


கணவன் மனைவி ஒருவர் மற்றவரை விட்டுப் பிடிக்க வேண்டும். ரொம்ப கட்டிப் போடக்கூடாது. கசக்கி பிழியக் கூடாது. கஞ்சி காய்ச்சக் கூடாது. தொனதொன என்று தொல்லை தரக் கூடாது. உப்பு சப்பு இல்லாத காரணத்திற்காக மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு பரணியில் உட்கார்ந்து கொள்ளக் கூடாது. கோபித்து கொண்டு அறையில் புகுந்து கதவை பூட்டிக் கொள்ளக் கூடாது.


எதற்கெடுத்தாலும் மூலையில் குந்திகொண்டு தேம்பித் தேம்பி அழக் கூடாது. தைரியம் வேண்டும், சமாளிக்க வேண்டும். சிரிச்சு பேசி மயக்க வேண்டும், மிதமான நகைச்சுவை செய்து மற்றவரை குதூகலப்படுத்த வேண்டும்.


கணவன் கோபித்துக்கொண்டு வெளியில் சென்று போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவதோ, அல்லது மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடிவிடுவதோ பிரச்சனையை பெரிதாக்கிவிடுமே தவிர. பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராது.


சரி, மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

சில வீடுகளில் ஆண் அதிக கோபக்காரனாக இருப்பான். சில வீடுகளில் பெண் கோபக்காரியாக இருப்பாள். தனது வாழ்க்கைத்துணை எப்படி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.


கோபத்திற்கான காரணங்களை இருவருமே தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கோபப்பட்டு விட்டால் உடனே மற்றவர் அவரை சாந்தப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் நீ கோபப்படாதே, ஏன் கத்துகிறாய். ஏன் டென்ஷன் ஆகிறாய், உனக்கு ரத்த கொதிப்பு அதிகம், கொஞ்சம் பொறுமையாக இரு! என்று உபதேசம் செய்யக் கூடாது.


கோபப்படுத்தியவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும். கோபத்தை ஏற்படுத்தியவர் தன் தவறை உணர வேண்டும். தன் தவறுக்காக வருந்த வேண்டும்.


ஒருவர், தான் தப்பும் செய்துவிட்டு, அதனால் தன் மீது கோபப்பட்டவர் மீது அவரும் கோபப்படுவதை விட முட்டாள்தனம் இருக்குமோ! இதுதான் இன்று நடக்கிறது.


கோபம், எரிச்சலை ஏற்படுத்தும்.


கோபம், அன்பை குறைத்துக் கொண்டே போகும்.


கோபம், இடைவெளியை உருவாக்கும்.


கோபம். நெருக்கத்தை குறைத்து, தூரத்தை அதிகப்படுத்தும்.


கோபம், நமது கண்ணியத்தை குறைக்கும்.


கோபம், நமது அழகையும் குறைத்து விடும்.


கோபமானது நமது உடல், உயிர், உடமை என அனைத்துக்கும் சேதம் விளைவிக்கும்.


கோபத்தின் தொடக்கம் பைத்தியம். அதன் இறுதி கைசேதம் என்று அரபு பழமொழி ஒன்று கூறுகிறது. ஆம், கோபத்தினால் கொலை வரை மனிதன் சென்று விடுகிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக!


கணவன், மனைவி கண்டிப்பாக கோபத்தை தவிர்த்து வாழ்ந்தால் அன்பான, பாசமான, பிரியமான, நேசமான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.


ஒரேடியாக கோபத்தை விட முடியவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை குறைத்து குறைத்து கோபமே இல்லாமல் ஆக்கிவிட முடியும்.


உங்களில் ஒருவர் கோபப்பட்டால் அவர் நின்றிருந்தால் உடனே உட்கார்ந்து விடட்டும். அவரை விட்டும் கோபம் சென்றுவிட்டால் சரி. இல்லை என்றால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி காட்டிய வழிமுறையை பின்பற்றுவோம்.28


அதுபோன்று கோபம் வரும்போது, ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற வேண்டும். அப்படி கூறினால் அந்த கோபம் சென்றுவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.


நபியே ஷைத்தான் உம்மை கோபப்படுத்தினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! என்று அல்லாஹ் கூறுகிறான்.30


அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் அத்தகைய நல்ல வாழ்க்கையை தந்தருள்வானாக!


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!"


ஆமீன்.


28. அறிவிப்பாளர்: அபூதர் அல்கிஃபாரி நூல்: ஸுனன் அபூதாவூது. : 4782.


29. அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு ஸுரத் . நூல்: ஸஹீஹுல் புகாரி. : 3282.



Comments