உம்மு அய்மன் (ரலி)
கேள்வி: உம்மு அய்மன் (ரலி) என்பவர்கள் யார்?
பதில்: இவர்களின் இயற்பெயர் 'பரிகா' என்பதாகும். உம்மு அய்மன் என்பது வழக்குப் பெயர் ஆகும்.
கேள்வி: இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
பதில்: அபீஸீனியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கேள்வி: இவர்களின் தந்தையின் பெயர் என்ன?
பதில்: தந்தையின் பெயர் தஃலபா இப்னு அம்ர் என்பதாகும்.
கேள்வி: உம்மு அய்மன் அடிமைப் பெண்ணா?
பதில்: ஆம்! இவர்கள் நபி (ஸல் ) அவர்களின் அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். சிறு வயது முதலே இவர்கள் ஹல்ரத் அப்துல்லாஹ் அவர்களிடம் இருந்து வந்தனர்.
ஹல்ரத் அப்துல்லாஹ் இறந்த பின்னர் இவர்கள் அன்னை ஆமினா அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பிறந்த பின் அண்ணலாரை வளர்க்கும் பேறு கிடைத்தது.
கேள்வி :இவர்களை யாருக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது?
பதில்: உபைது இப்னு ஜைத் என்னும் ஸஹாபிக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. உபைது இப்னு ஜைத் அவர்கள் ஹுனைன் என்னும் போரில் பங்கு கொண்டு வீர தீரத்துடன் போரிட்டு அப்போரிலேயே மரண மடைந்தார்கள். பின்னர் இவர்களை நபி (ஸல்) அவர்கள் தம் பணியாள் ஜைதுப்னு ஹாரிதா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.
கேள்வி: ஹல்ரத் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்துள்ளார்களா?
பதில்: ஆம்! புனித மக்காவில் சகிக்க முடியாத கொடுமைகளை இஸ்லாமியப் பகைவர்கள் செய்த பொழுது, முதலில் அபீஸீனியா நாட்டிற்கு ஹிஜ்ரத்துச் செய்தார்கள். அதன் பின்னர், இரண்டா வதாக அங்கிருந்து மதீனா முனவ்வராவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.
கேள்வி: இவர்கள் ஏதும் போரில் கலந்து கொண்டதுண்டா?
பதில்: ஆம்! இவர்கள் உஹது போரிலும், கைபர் போரிலும் கலந்து கொண்டார்கள். போர்க் களங்களில் காயமுற்ற வீரர்களுக்கு மருத்துவம் செய்வதும், தண்ணீர்க் கொடுப்பதும் இவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகளாகும்.
கேள்வி: இவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தனரா?
பதில்: ஆம்! அய்மன், உஸாமா என்று இரு பிள்ளைகள் பிறந்தனர். அய்மன் என்பவர் முதல் கணவருக்குப் பிறந்தவர் ஆவார். இந்த அய்மன் நபி (ஸல் ) அவர்களின் தோழர்களில் ஒருவராயிருந்தார்.
உஸாமா என்பவர் நபி (ஸல்) அவர்களின் நெருக்கமான அன்பைப் பெற்றவராயிருந்தார். உஸாமாவின் தந்தையும் நபிகளாரின் அன்புக்கு உரியவராக இருந்து வந்தார்.
கேள்வி: அவ்விரு பிள்ளைகளும் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டார்களா?
பதில்: உம்மு அய்மன் (ரலி) அவர்களின் மகன்களில் அய்மன் என்பவர் மட்டும் கைபர் போரில் கலந்து ஷஹீது ஆனார். இவர் வீர மரணம் எய்திய பொழுது அம்மையார் அவர்கள் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.
கேள்வி: இவர்கள் எப்பொழுது காலமானார்கள்?
பதில்: ஹல்ரத் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ஹல்ரத் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் காலமானார்கள்.
சிறப்பும் நற்குணமும்
கேள்வி: அய்மன் (ரலி) அவர்களின் சிறப்பும், நற்குணமும் யாவை?
பதில்: இவர்களின் முதல் கணவர் இறந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள், "எவரேனும் சுவர்க்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் உம்மு அய்மனைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இவர்கள் உலகத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை வளர்த்த காரணத்தால் அவர்களுக்கு சிறப்பும் மேன்மையும் கிடைத்தது. பல ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உம்மு அய்மன் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வார்களாயின், அய்மன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு 'ஷர்பத்' வழங்குவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவர்களை மிகவும் அன்புடன் வரவேற்பார் கள். நபி (ஸல்) அவர்களின் மரணம் இவர்களை எலும்பும் தோலும் ஆக்கி விட்டது. அந்த அளவிற்கு நபி (ஸல்) மீது பாசம் கொண்டிருந்தார்கள்.
15. குனஸா (ரலி )
கேள்வி:குனஸா (ரலி) என்னும் இவ்வீரப் பெண்மணி யார்?
பதில்: இவ்வீரப் பெண்மணி இரண்டாம் கலீஃபா ஹல்ரத் உமருல் ஃபாருக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் 'காதிஸிய்யா' போரின் பொழுது தங்களின் அருமை மைந்தர்களுக்கு வீர உணர்ச்சியினை ஊட்டிய பெண் ஸஹாபி ஆவார்கள்.
கேள்வி: இவர்களின் இயற்பெயர் என்ன?
பதில்: 'தாமலிர்' என்பது இவர்களின் இயற்பெயராகும்.
கேள்வி: இவர்களுக்குத் திருமணம் நடந்திருந்ததா?
பதில்: ஆம்! இவர்கள் 'நஜ்த்' என்னும் நகரில் இருந்து வந்தார் கள். அச்சமயம், ரவாஹா இப்னு அப்துல் உஸ்ஸா என்பவருடன் திருமணம் ஆகியிருந்தது. ரவாஹா இறந்தபின் மர்வாஸ் இப்னு அபூ ஆமிர் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்கள்.
கேள்வி: இவர்களின் வீர வாழ்க்கை எத்தகையது?
பதில்: ஹிஜ்ரி 14-ம் ஆண்டு ஈரானியர்களுடன் போரிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. உமர் (ரலி) அவர்களின் கொடியின் கீழ் முஸ்லிம் வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
வீரத் தாய்மார்களோ தம் ஆண் மக்கள் தம் மார்பில் அமுதுண்டதைச் சுட்டிக்காட்டி அவ்விளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தனர்.
அவ்வீரத் தாய்மார்களில் குனஸா (ரலி), 'போரில் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள். அல்லாஹ்வின் பாதையில் உங்கள் தலைகளைத் தத்தம் செய்யுங்கள். சத்தியமே வெல்லும்!" எனக் கூறி உணர்ச்சி ஊட்டி அனுப்பி வைத்தார்கள்.
கேள்வி :இவ்வீர உரைகளைக் கேட்ட அவர்களின் பிள்ளைகள் என்ன செய்தார்கள்?
பதில்: பொழுது புலர்ந்ததும் குனஸா (ரலி) அவர்களின் நான்கு ஆண் மக்களும் வீரத்துடன் போர்க் களம் நோக்கிச் சென்றனர். இறுதியாக ஒருவருக்குப் பின் ஒருவராக வீர மரணம் எய்தினார்கள்.
கேள்வி: இச்செய்தியைக் கேள்விப்பட்ட கனஸா (ரலி) என்ன செய்தார்கள்?
பதில்: "அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்" என்று கூறி பொறுமையைக் கைக்கொண்டனர்.
கேள்வி: இவர்கள் எப்பொழுது மரணமானார்கள்?
பதில்: ஹிஜ்ரீ 24-ம் ஆண்டில் மரணமானார்கள்.
கேள்வி: இவர்களின் சிறப்புகள் யாவை?
பதில்: பேச்சு வன்மையிலும், கவிதைகள் இயற்றுவதிலும் தலைசிறந்து விளங்கினார்கள். குனஸா (ரலி)யைப் போல் பெண்களில் வேறு எந்த கவிஞர்களையும் கண்டதே இல்லை எனக் கூறப்படுகிறது.
அந்தோ! இன்றைய தாய்மார்களில் பலர் கோழைகளாகவும், மார்க்கப்பற்று இல்லாதவர்களாகவும், மார்க்க நெறிமுறைகளைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காதவர்களாகவும் அன்றோ உள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ் முற்றும்.ஸஹாபா பெண்கள்.
Comments
Post a Comment
Best comment is welcomed !