அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்

 


அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்


எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை.


பல நல்ல எதிர்பார்ப்புகளைக் கொண்டுதான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.


நல்ல எதிர்பார்ப்புகள் மனதுக்கு இதமாகவும், இன்பமாகவும் இருக்கும்.


ஆம், சொர்க்கத்தை எதிர்பார்த்து முஃமின்களின் வாழ்க்கை இன்பமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவுதான் சிரமமும், வலியும், துன்பமும் இருந்தாலும் சரி.


மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு, அவனது பொருத்தம், இன்பமான சொர்க்கம் இவற்றை எல்லாம் நம்பிக்கையாளர் எதிர்பார்த்திருக்கும் போது இந்த உலகத்தின் வலிகள், இன்னல்கள், பிரச்சனைகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.


நம்மை பார்த்து காஃபிர்கள் நகைக்கிறார்கள். நாமோ சொர்க்கத்தை எதிர்பார்த்தவர்களாக அதை எளிதில் கடந்து செல்கிறோம்.32


இந்த வாழ்க்கையில் சிரமப்படாதவர் உண்டோ! இன்னல்கள் இல்லாத வாழ்க்கை இருக்கிறதா? சிரமங்கள் இன்றி யார் வாழ்கிறார்? பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் எந்த உயிரினம் வாழ்கிறது.


இந்த உலகில் சிரமப்படுகிற உயிரினம் மனிதன் மட்டுமா?


காட்டில் உள்ள மிருகங்களாக இருக்கட்டும், கடலில் உள்ள மீன்களாக இருக்கட்டும். ஆகாயத்தில் பறக்கும் பறவைகளாக இருக்கட்டும், மண்ணுக்குள் வாழ்கிற புழு பூச்சுகளாக இருக்கட்டும். இதில் பிரச்சனை குறைவானவன் மனிதன்தான். ஆனால், அது அவனுக்கு புரியாது.


சரி, இப்போது குடும்ப வாழ்க்கைக்கு வருவோம்.


திருமணத்திற்கு முன்பு ஆணுக்கு தனது வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகிறார்களா மனைவி பற்றி பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அவள் அப்படி இருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டும். அவள் அதை செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டும். அப்படி இருக்கக் கூடாது, இப்படி இருக்கக் கூடாது. அதை செய்ய கூடாது. இதை செய்ய கூடாது. இப்படியாக இருக்க வேண்டிய, இருக்க வேண்டாத பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.


அப்படித்தான் பெண்ணுக்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.


இப்படி, ஆணும் பெண்ணும் எதிர்பார்ப்பது சரியா, தவறா?


சரி என்றும் ஒத்த வார்த்தையில் சொல்ல முடியாது. தவறு என்றும் ஒத்த வார்த்தையில் சொல்ல முடியாது.


எதிர்பார்ப்புகள், ஆசைகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமான பொருள் கொண்ட வார்த்தைகள் என்று கூட சொல்லலாம். மொழி ரீதியாக இரண்டுக்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமும் செய்யலாம்.


அதாவது, ஒவ்வொருவருக்கும் ஆசைகள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், ஆசைகள் எதிர்பார்ப்புகளாக மாற வேண்டுமென்றால் அதற்கு சில வரையறைகள் உள்ளன.


1. நாமும் நமது அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற, கைகூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும்.


2. அந்த எதிர்பார்ப்பு நமது தகுதிக்கு ஏற்ப இருக்க வேண்டும்.


3. நடைமுறைக்கு சாத்தியமானதாக நமது எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.


4. எதிர்பார்ப்புகள் ஓர் அளவிற்கு, ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும்.


5. எதிர்பார்ப்பு ஹலாலான ஆகுமமான வழியில் நிறைவேறுகிற -வரை பொறுமையாக இருக்க வேண்டும்.


6. நாம் எதிர்பார்ப்பது நமது சூழ்நிலை, நமது பொருளாதாரம், இன்று, நமது சமூக அந்தஸ்து, நமது குடும்ப தகுதிக்கு ஏற்ப இருக்க வேண்டும்.


7. நாம் யாரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அது அவரால் முடியுமா என்பதை அறிந்து எதிர்பார்க்க வேண்டும்.


8. ஒருவரால் முடியாத ஒன்றை; அல்லது, அவர் பழக்கப்படாத ஒன்றை; அல்லது. அவரிடம் இல்லாத ஒன்றை அவரிடம் எதிர்பார்த்து விட்டு, நாமும் ஏமாந்து போவதையோ; அல்லது அவரை நொந்து கொள்வதையோ நாம் தவிர்க்க வேண்டும்.


9. நமது ஆகுமமான எதிர்பார்ப்பு நிறைவேற நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும்.


10. ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்று அடம் பிடிக்க கூடாது. நமது எதிர்பார்ப்புகளை அல்லாஹ்வின் நாட்டத்தில் விட்டுவிட வேண்டும்.


11. எதிர்பார்த்தது நடந்தால், அல்ஹம்து லில்லாஹ். இல்லை என்றால் எது நடந்ததோ அதையே ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்.


12. நாம் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக நடந்துவிட்டால், அதற்காக நாம் கவலைப்பட்டு நம்மை மாய்த்துக் கொள்ளக் கூடாது. மன நெருக்கடிக்கு ஆளாகி பித்துபிடித்தவன்போல் ஆகி விடக்கூடாது. அதை நினைத்து நிகழ்கால இன்பத்தையும் வெற்றியையும் இழந்துவிடக் கூடாது.


ஒருவர் தன் மனைவி உலக அழகியாக; அல்லது. உலக பணக்காரியாக; அல்லது, உலக அறிவாளியாக; அல்லது, உலகிலேயே மிகப் பெரிய புத்திசாலியாக; அல்லது, இப்படி ஏதாவது ஒன்றில் வெறி டாப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆசையில் தப்பு இல்லை. நல்ல ஆசைகள் இருக்க வேண்டும். நல்ல ஆசைகள் வர வேண்டும். நல்ல ஆசைகள் வரலாம். நல்ல ஆசைகளை ஆசைவைக்கலாம். அந்த ஆசையை எதிர்பார்ப்பாக ஆக்கிக் கொண்டு நீங்கள் ஒரு கல்யாண புரோக்கரை அணுகி அவரிடம் வரப்போகும் மனைவி இப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசையை எதிர்பார்ப்பாக ஆக்கி அதை நீங்கள் அவரிடம் சொன்னால் அவர் என்ன பதில் சொல்வார்?!


தமிழில் ஒரு பழமொழி உண்டு.


"ஆசை இருக்கு ராசாவாக, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க"


அப்படித்தான் நமது ஆசைகள் பலவற்றை நாம் நமது உள்ளத்தில்தான் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, வெளியில் சொல்ல முடியாது. வெளியில் எதை சொல்ல முடியுமோ அந்த ஆசைதான் நமது எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.


நன்றாக படிக்கிற ஒரு மாணவன், தான் மருத்துவராக வேண்டும்; அல்லது, பொறியாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதை எதிர்பார்க்கிறான்.


நன்றாக படிக்கிற மாணவன் ஒருவன், முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், பரீட்சை நன்றாக எழுதிவிட்டு அதை எதிர்பார்க்கிறான்.


வாடிக்கையாளர் அதிகம் வருகிற இடத்தில் ஒரு கடையை திறந்து. அதில் தரமான பொருட்களை வைத்து, வருவோரை நல்ல பண்போடு வரவேற்று ஒருவர் வர்த்தகம் செய்கிறார். இவர் தனக்கு இலாபத்தை, நல்ல வருவாயை ஆசை வைக்கிறார். அதை எதிர்பார்க்கிறார். இவரின் ஆசையும் சரியானது. இவரின் எதிர்பார்ப்பும் நியாயமானது என்று கூறுவோம்.


இத்தகைய நிலையை சரியான ஆசை, சரியான எதிர்பார்ப்பு என்கிறோம்.


இந்த சில உதாரணங்களை புரிந்துகொண்டால் நமது வாழ்க்கை மிக எளிதாகிவிடும்.


நடைமுறை வாழ்க்கைக்கு எது சாத்தியமோ அதை மட்டுமே நாம் ஆசைவைத்து, அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.


திருமணம் ஆகுவதற்கு முன்பு ஆணும் பெண்ணும் பல ஆசைகள் வைத்திருக்கலாம். அவற்றை எதிர்பார்ப்புகளாக மாற்றி, முடிந்த வரை சாத்தியமாக்க முயற்சிகள் செய்யலாம்.


நமது ஆகுமமான எல்லா நல்ல முயற்சிகளையும் செய்வதில் குற்றம் ஏதும் இல்லை.


பிறகு, எது நடக்கிறதோ அது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது.


ஆகவே. நடந்ததை நாம் பொருந்தி கொள்ள வேண்டும். அதில் அல்லாஹ்விடம் நன்மையை வேண்டி துஆச் செய்ய வேண்டும். அதில் உள்ள நன்மைகளை பார்க்க வேண்டும்.


சில சமயம் ஆசைப்பட்டது, எதிர்பார்த்தது. முயற்சி செய்தது எல்லாம் சரியாக இருந்தும் விரும்பத்தகாத ஒன்று நிகழ்ந்து விடலாம். நாம் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் முரணானது அமைந்து விடலாம். அல்லாஹ் அப்படி நடக்காமல் பாதுகாப்பாக! ஆமீன்.


பயணத்தை மேற்கொள்ளும்போது சில சமயம் வண்டி பஞ் சராகுவதை போல; வண்டி, அந்த வீலுடன் நகர்வதே சிரமமாகி விடுவதை போல சில சமயம் வாழ்க்கை நகர்வதே சிரமமாகி விடலாம். பஞ்சரை சரி செய்ய வேண்டும். எத்தனை முறை சரி செய்ய முடியுமோ அத்தனை முறை சரி செய்ய வேண்டும். இனி சரி செய்தாலும் எந்த பலனும் இல்லை என்று முடிவெடுத்து விட்டால் டியூபை, டயரை மாற்ற வேண்டும் அல்லவா?


அப்படித்தான் இஸ்லாமும் நமக்கு தலாக், குலா போன்ற அழகிய தீர்வை வைத்திருக்கிறது. அந்த இறுதி கட்டம் என்பதை நினைவில் வைக்கவும்.


இல்லை என்றால் கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என்பதற்காக ஆப்ரேஷன் செய்து கையை அல்லது காலை எடுப்பதா?


இறுதி கட்டம்தான் ஆப்ரேஷன். அப்படித்தான் தலாக்கும் குலாவும்.


கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அழகிய நல்ல எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை வைப்பதற்கு முன்னர் நன்கு யோசித்து கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களை புரிந்து கொண்டு, அதற்கேற்ப எதிர்பார்க்க வேண்டும்.


தேவை இல்லாத, அனாவசியமான, அதிக எதிர்பார்ப்புகளை வைத்துவிட்டால், அவை நிறைவேறாமல் போகும்போது நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடும். நமது மூடு அவுட் ஆகிவிடும்; நமது மைண்ட் அப்செட் ஆகிவிடும். அதை தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்குள் சண்டை சச்சரவுகள் உருவாகலாம்.


ஒரு மனைவி தனது கணவனால் என்ன சாத்தியமோ அதை மட்டுமே அவனிடம் எதிர்பார்க்க வேண்டும்..


ஒரு கணவன் தனது மனைவியிடம் அவளால் என்ன சாத்தியமோ அதை மட்டுமே அவளிடம் எதிர்பார்க்க வேண்டும்.


ஒவ்வொருவரும் அடுத்தவரின் தகுதி அறிந்து அவரிடம் எதிர்பார்ப்புகள் வைக்க வேண்டும்.


நாம் விரும்புவதை எல்லாம் அவை நல்லவையாக இருந்தாலும் அடுத்தவர் நிறைவேற்ற வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதும் எதிர்பார்ப்பதும் இறைவனின் விதிப்படி நடைமுறையில் முடியாத ஒன்றாகும். அல்லாஹ்வின் விதியில் எழுதப்பட்டதுதான் நடக்கும்


தனது மகன் லா இலாஹ இல்லல்லாஹ் சொல்ல வேண்டுமென்று நபி நூஹ் ஆசைப்பட்டார்கள். முயற்சி செய்தார்கள். நடக்கவில்லை.


தனது மனைவி நல்லவளாக ஆக வேண்டும் என்று நபி லூத் * முயற்சி செய்தார்கள். ஆனால், நடக்கவில்லை.


தனது தந்தை, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். சிலை வணக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று நபி இப்ராஹீம் ஆசைப்பட்டார்கள். பல முறை அறிவுரை கூறினார்கள். விடா முயற்சி செய்தார்கள். ஆனால், நடக்கவில்லை.


நமது நபி அவர்கள் தமது சாச்சா இஸ்லாமை ஏற்க வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார்கள். முயற்சி செய்தார்கள். சாச்சாவின் இறுதி மூச்சு வரை அவரை கலிமாவின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், அவரோ நிராகரிப்பிலேயே இறந்து விட்டார். அவருக்கு இஸ்லாமை அல்லாஹ் நாடவில்லை. இது குறித்து, நபியே நீர் விரும்பியவருக்கு நேர்வழி காட்டிவிட முடியாது என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான். 


அப்படித்தான் நமது குடும்பத்திலும், எல்லோரும் கலந்து இருப்பார்கள். பல பண்புள்ள, பல குணமுள்ளவர்கள் இருப்பார்கள். நமது அறிவுரையை ஏற்பவரும் இருப்பார்கள். நமது உபதேசத்தை எதிர்ப்பவரும் இருப்பார்கள்.


கணவன், மனைவி இருவரில் ஒவ்வொருவரும் பிறரின் நல்ல ஆசையை, எதிர்பார்ப்பை புரிய வேண்டும், அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.


ஆனால், ஒருவரின் உடல், உயிர், மனம், ஆசை, விருப்பம் இவை அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அடுத்தவரின் கட்டுப்பாட்டில் இல்லை.


ஆகவே, நீங்கள் விரும்புகிறபடி மற்றவர் அப்படியே முழுமையாக மாறிவிட வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கிறபடி அவர் அதை செய்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவர் நீங்களும் நீங்கள் அவராகவும் ஆனால்தான் முடியும்.


நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்புகளில் சிலவற்றையோ அல்லது பலவற்றையோ நிறைவேற்ற இயல மாட்டீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்க்கை துணையும் நீங்கள் இருவருமே புரிய வேண்டும்.


இங்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது.


அதாவது, உங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் வாழ்க்கை துணையோடு நீங்கள் கலந்துரையாடினீர்களா?


அவரிடம் உங்கள் எதிர்பார்ப்புகளை எடுத்து கூறியீர்களா? உங்கள் எதிர்பார்ப்புகளை பற்றி அவரிடம் மனம் விட்டு பேசினீர்களா? அவரிடம் உங்களுக்கு என்னென்ன நல்ல எதிர்பார்ப்புகள் உள்ளன என்பதை அவரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்களா?


இவற்றில் எதையும் நீங்கள் செய்யாமல், உங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் மனதில் மறைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கை துணையிடம் அவசியம் தேடுவது எப்படி நியாயமாகும்.


இருவரும் ஓர் இடத்தில் அமைதியாக உட்காருங்கள்!


இருவரும் மனம்விட்டு பேசுங்கள்!


ஒருவர் மற்றவரை அன்போடு பாருங்கள்!


புன்முறுவலாக ஒருவர் ஒருவரை நோக்குங்கள்!


பாசமான, காதலான கண் பார்வைகளைக் கொண்டு ஒருவர் மற்றவரை ரசித்துக்கொண்டே பேச ஆரம்பியுங்கள்!


உங்களில் ஒருவருக்கு மற்றவரிடம் இருக்கிற நல்ல எதிர்பார்ப்புகளை நயமாக அழகாக நல்ல சொற்களைக் கொண்டு எடுத்துச் சொல்லுங்கள்!


அவற்றை நிறைவேற்றினால் குடும்பத்திற்கு கிடைக்கப்போகும் நன்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்!


அவருக்கு உங்கள் எதிர்பார்ப்புகள் பற்றி நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்!


எது அடுத்தவரிடம் இல்லையோ, எதை அவரால் செய்ய இயலாதோ அதை அவரிடம் முழுவதுமாக எதிர்பார்க்காதீர்கள்!


அரபியில் சொல்வார்கள்:


"ஒன்றை இழந்திருப்பவன் அவனால் அதை கொடுக்க முடியாது."


ஆனால், மனிதன் எதையும் கற்றுக்கொள்ளக் கூடியவன். ஆகவே, உங்கள் வாழ்க்கை துணைக்கு கற்றுக்கொடுங்கள்! செய்து காட்டுங்கள்! வழிகாட்டுங்கள்! இப்படியாக நமது நல்ல எதிர்பார்ப்புகளை முடிந்த வரை அடுத்தவரிடம் நாம் சாத்தியமானதாக ஆக்கிக்கொள்ளலாம்.


நீங்கள் இருவரும் நல்லபடியாக பேசி ஒரு புரிந்துணர்வுக்கு வாருங்கள்!


அல்லாஹ்வே! எங்களுக்கும் எங்கள் ஜோடிகளுக்கும் இடையில் நல்ல பொருத்தத்தை, புரிந்துணர்வை தா! எங்களில் ஒருவர் மற்றவரின் நல்ல எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவராக ஆக்கிவை! மறுமைக்காக வாழ்ந்து சொர்க்கத்தின் நற்பாக்கியத்தைப் பெற்ற வெற்றியாளர்களால் எங்களை ஆக்கிவை!


அல்லாஹ்வே! எங்களுக்கு திருப்தியான, நிம்மதியான, மகிழ்ச்சியான, கண் குளிர்ச்சியான நல்ல வாழ்க்கையை தந்தருள்வாயாக!


"எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!”


ஆமீன்.


Comments